செஞ்சி அருகே டாஸ்மாக் கடையில் ரூ.27½ லட்சம் கையாடல் 2 பேர் பணியிடை நீக்கம்

செஞ்சி அருகே டாஸ்மாக் கடையில் ரூ.27½ லட்சம் கையாடல் செய்த 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Update: 2022-12-15 18:45 GMT


விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 227 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு தினசரி 3 முதல் 5 கோடி ரூபாய் வரைக்கும் மதுபாட்டில்கள் விற்பனை ஆகும். இந்த நிலையில், டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றது. இதையடுத்து, பறக்கும்படையினர், வெளிமாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

இதில் மதுபாட்டில்களை நிர்ணயம் செய்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

பணம் கையாடல்

இதனிடையே, நேற்றுமுன்தினம் இரவு செஞ்சி அருகே வரிக்கல் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் பறக்கும்படை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கடையில் விற்பனை செய்யப்பட்ட மதுபாட்டில்களில், 27 லட்சத்து 63 ஆயிரத்து 980 ரூபாய் கையாடல் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கடையின் மேற்பார்வையாளர் அர்ஜூணன், விற்பனையாளர் அசோகன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பறக்கும் படையினர், விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளருக்கு அறிவுறுத்தினர்.

பணியிடை நீக்கம்

அதன்பேரில் 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் மாவட்ட மேலாளர் ராமு உத்தரவிட்டுள்ளார். மேலும் இவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்