திண்டுக்கல்லில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடி மோசடி; அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் கைது

திண்டுக்கல்லில், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி செய்த அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-12 17:00 GMT

திண்டுக்கல்லில், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி செய்த அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

முன்னாள் கவுன்சிலர்

திண்டுக்கல்லை சேர்ந்தவர்கள் சுகுமார், சரவணன், செந்தில் முருகன், பிரகதா உள்பட 12 பேர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் நேற்று ஒரு புகார்மனு கொடுத்தனர். அந்த மனுவில், திண்டுக்கல் ஆர்.எம். காலனி 9-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் சோனா சுருளிவேல் (வயது 46). இவர் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஆவார். கடந்த 2019-ம் ஆண்டு இவருடன் எங்களுக்கு பழக்கம் ஏற்பட்டது.

அப்போது அரசு அலுவலகங்கள், கூட்டுறவு வங்கிகளில் தன்னால் வேலை வாங்கி தரமுடியும் என்று சோனா சுருளிவேல் கூறினார்.அதனை உண்மை என நம்பிய நாங்கள் எங்களின் மகன், மகள்களுக்கு அரசு வேலை வாங்கி தரும்படி கூறினோம். மேலும் அதற்காக ரூ.5 லட்சம் முதல் ரூ.11 லட்சம் வரை அவரிடம் கொடுத்தோம். 12 பேரிடம் இருந்து மொத்தம் ரூ.1 கோடி வரை பெற்றுக்கொண்ட அவர் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அரசு வேலை வாங்கி தருவதாக கூறினார். ஆனால் அவர் கூறியபடி வேலை வாங்கி தரவில்லை.

மோசடி வழக்கில் கைது

இதையடுத்து அவரை சந்தித்து நாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டோம். அப்போது எங்களுக்கு தனித்தனியாக காசோலைகளை வழங்கினார். ஆனால் அவற்றை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லாமல் திரும்ப வந்துவிட்டது. இதையடுத்து அவரை மீண்டும் தொடர்புகொள்ள முயன்ற போது தான் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி அவர் எங்களை மோசடி செய்தது தெரியவந்தது.

மேலும் பணத்தை திரும்ப கொடுக்காமல் கொலை மிரட்டலும் விடுக்கிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர். இந்த மனுவை பெற்ற சூப்பிரண்டு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதா தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், சோனா சுருளிவேல் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்