கடன் வாங்கி தருவதாக பெண்களிடம் மோசடி

கடன் வாங்கி தருவதாக பெண்களிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2023-05-21 18:50 GMT

தஞ்சாவூர் மாவட்டம், வேப்பங்காடு கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவர், தன்னை சித்த மருத்துவர் எனக்கூறி கொண்டு ஆலங்குடி பகுதியில் உள்ள கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியார் அறக்கட்டளை ஒன்றின் மூலமாக வீடுகள் சீரமைப்பதற்கு மற்றும் வீடு கட்டுவதற்கும் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை கடன் வாங்கி தருவதாக கூறியுள்ளார். பின்னர் பெண்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் ரூ.1,000 முதல் ரூ.3,000 வரை கமிஷன் தொகையும், ஆவணங்களையும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆவணங்களை அளித்திருந்த நிலையில் பல ஆண்டுகளாகியும் கடன் தொகை வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் நாகராஜிடம் தொடர்பு கொண்டு தங்களுக்கு கடன் எதுவும் வேண்டாம் நாங்கள் கட்டிய பணத்தையும், எழுதிக்கொடுத்த கடன் பத்திரம், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை திருப்பி கேட்டுள்ளனர். இதையடுத்து நாகராஜ் ஆலங்குடி பகுதியில் உள்ள தனது அலுவலகத்திற்கு பாதிக்கப்பட்டவர்களை வாருங்கள் கடன் பத்திரத்தை திரும்பி தருகிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் இதுநாள் வரை ஆவணங்களையும், பணத்தையும் திருப்பிக் கொடுக்க வில்லை. மேலும் இதுகுறித்து கேட்டபோது, பாதிக்கப்பட்டவர்களை மிரட்டுகின்றனர். இதுகுறித்து மழையூர் பகுதியை சேர்ந்த மயில்வாகணன் மனைவி புஷ்பம் உள்ளிட்ட பெண்கள் நாகராஜ் உள்பட 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்