பல கோடி மோசடி வழக்கில் 2 பேர் கைது

காரைக்குடியில் நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 2 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-07 18:45 GMT

காரைக்குடியில் நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 2 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

மோசடி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நியூ ரைஸ் ஆலயம் என்ற நிதி நிறுவனம் மற்றும் அதனுடன் இணைந்த 7 துணை நிறுவனங்கள் பல கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்று அறிவித்தனர். இதை நம்பி ஏராளமான பொதுமக்கள் பல கோடி ரூபாய் பணத்தை முதலீடு செய்தனர். முதிர்வு காலம் முடிந்த நிலையில் முதலீடு செய்தவர்களுக்கு பணம் தராமல் அந்நிறுவனம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மதுரை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி ராஜா, மாதவன், மகேந்திரன், தங்கேஸ்வரி, பழனியப்பன், பவுல் ஆரோக்கியசாமி, அன்வர் உசேன் மற்றும் 49 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்தவர்களை பிடிப்பதற்காக சிவகங்கை பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அல்லிராணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் காரைக்குடியை சேர்ந்த அன்வர் உசேன் (வயது 41), அந்தோணி தனராஜ் (44) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்கள் 2 பேரும் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

புகார் அளிக்கலாம்

இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் அல்லிராணி கூறியதாவது:- இந்த வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள மற்றவர்களை போலீசார் தேடி வருகிறோம். மேலும் நியூ ரைஸ் ஆலயம் நிறுவனம் மற்றும் அதனுடன் இணைந்த மற்ற 7 நிறுவனங்களில் பணம் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட பொதுமக்களில் இதுவரை புகார் அளிக்காதவர்கள் தங்களிடம் உள்ள அசல் ஆவணங்களுடன் சிவகங்கை திருப்பத்தூர் சாலையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் நேரில் ஆஜராகி புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்