வாட்ஸ்அப்பில் பேசிய நபர் செல்போன் அனுப்பி வைப்பதாக கூறியதால்நூதன முறையில் பணத்தை இழந்த கல்லூரி மாணவர் போலீசில் புகார்

வாட்ஸ்அப்பில் பேசிய நபர் செல்போன் அனுப்பி வைப்பதாக கூறியதால் கல்லூரி மாணவர் நூதன முறையில் பணத்தை இழந்தார். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2023-02-21 18:45 GMT

சிவகங்கை,

வாட்ஸ்அப்பில் பேசிய நபர் செல்போன் அனுப்பி வைப்பதாக கூறியதால் கல்லூரி மாணவர் நூதன முறையில் பணத்தை இழந்தார். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

செல்போன் தருவதாக...

காரைக்குடி செஞ்சை பகுதியைச் சேர்ந்தவர் ஜான் பிரிட்டோ (வயது 19).கல்லூரி மாணவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருடன் வாட்ஸ் அப் நம்பரில் பேசிய ஒருவர் தான் வெளிநாட்டில் இருந்து பேசுவதாகவும் படிக்கும் மாணவர்களுக்கு அன்பளிப்பாக பல்வேறு பொருட்களை அனுப்பி வருவதாகவும் கூறினார். அதன்படி உங்களுக்கும் செல்போன் உள்ளிட்ட பொருட்களை அனுப்பி உள்ளதாக அந்த நபர் கூறினார்.

பின்னர் மற்றொரு நம்பரில் இருந்து பேசிய ஒருவர் தான் மும்பையில் இருந்து பேசுவதாகவும் ஜான் பிரிட்டோவுக்கு வெளிநாட்டிலிருந்து பார்சல் வந்துள்ளதாகவும் அதற்கு வரி கட்ட வேண்டும் என்று கூறினார். இதை நம்பிய மாணவர் பல்வேறு தவணைகளில் ரூ.75 ஆயிரம் கட்டியுள்ளார். அதன் பின்னரும் அந்த நபர் மேலும் பணம் கட்ட சொல்லி உள்ளார்.

போலீசில் புகார்

இதனால் சந்தேகமடைந்த அவர் இதுகுறித்து சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தேவி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். போலீசார் நடத்திய விசாரணையில் ஜான் பிரிட்டோவுக்கு வந்த போன்கள் மராட்டிய மாநில பகுதியில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்