சின்னமனூர் வாலிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி; 2 பேர் மீது வழக்கு

துப்பாக்கி தொழிற்சாலையில் வேலை வாங்கி தருவதாக சின்னமனூர் வாலிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்ததாக 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.;

Update: 2023-01-13 17:39 GMT

தேனி மாவட்டம் சின்னமனூர் வெள்ளையன்தெருவை சேர்ந்த பாண்டி மகன் பாண்டியராஜா (வயது 31). பி.எஸ்.சி. பட்டப்படிப்பு படித்துள்ளார். இவர் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

நான் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சென்னையில் மின்வாரிய தலைமை அலுவலகத்துக்கு நேர்முகத்தேர்வுக்கு சென்றேன். அப்போது அங்கு சென்னை ஜார்ஜ் டவுன், செவன்வெல்ஸ் புனித சேவியர் தெருவை சேர்ந்த மைக்கேல் மகன் ஸ்டீபன், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி இந்திரா நகரை சேர்ந்த மணிமாறன் ஆகியோர் வந்திருந்தனர். அப்போது அவர்களுடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் சின்னமனூருக்கு வந்தனர்.

அப்போது அவர்கள் தங்களுக்கு அரசியல்வாதிகளையும், அரசு அதிகாரிகளையும் தெரியும் என்றும், பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கிக்கொடுப்பதாகவும் கூறினர். ரூ.6 லட்சம் கொடுத்தால் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறினர். அதை நம்பிய நான் அவர்களின் வங்கிக் கணக்கில் பல தவணையாக ரூ.6 லட்சம் அனுப்பினேன். ஆனால் அவர்கள் வேலை வாங்கித் தராமல் இழுத்தடித்தனர். பின்னர் அவர்களிடம் பணத்தை திருப்பிக் கேட்டபோது, ரூ.1 லட்சத்தை மட்டும் தந்து விட்டு ரூ.5 லட்சத்தை மோசடி செய்துவிட்டனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் ஸ்டீபன், மணிமாறன் ஆகிய 2 பேர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்