போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை பத்திரப்பதிவு செய்ய முயன்ற பெண் உள்பட 4 பேர் கைது

போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை பத்திரப்பதிவு செய்ய முயன்ற பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-06-16 20:08 GMT

கே.கே.நகர்:

திருச்சி மாவட்டம், ஆலம்பட்டிபுதூரை சேர்ந்த சின்னையனின் மகன் கருப்பையா(வயது 35). இவர் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். நேற்று மதியம் கருப்பையா மேலகல்கண்டார்கோட்டை சாமிநாதன் நகரை சேர்ந்த பீட்டரின் மனைவி ஆரோக்கியமேரி(59), விராலிமலை தாலுகா, குன்னத்தூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் ஆசீர்வாதம்(51), திருச்சி மேலகல்கண்டார் கோட்டையை சேர்ந்த ராம்குமார்(41) ஆகியோருடன் திருச்சி கே.சாத்தனூர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அங்கு மேக்குடி கிராமத்தில் உள்ள 4,800 சதுர அடி நிலத்தை ஆரோக்கியமேரி பெயரில் பத்திரப் பதிவு செய்வதற்கான ஆவணங்களை சார் பதிவாளர் கோகிலா முன்னிலையில் தாக்கல் செய்துள்ளார். அவற்றை சார் பதிவாளர் கோகிலா சரிபார்த்தபோது ஆரோக்கியமேரியின் ஆதார் அட்டை போலியானது என்பது தெரியவந்தது. மேலும் பத்திரப்பதிவு செய்வதற்காக காட்டப்பட்ட நிலம் வேறு ஒருவர் பெயரில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து கருப்பையா உள்ளிட்ட 4 பேரையும் கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீசில் சார் பதிவாளர் கோகிலா ஒப்படைத்தார். போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், மேக்குடி கிராமத்தில் வெளிநாட்டில் வசிக்கும் ஜெய பப்லி, பீட்டர் பப்லி ஆகியோருக்கு சொந்தமான நிலத்தில் பீட்டர் பப்லியின் பங்கு 4,800 சதுரடி நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் ஆரோக்கியமேரியின் பெயருக்கு பத்திரப்பதிவு செய்ய முயற்சி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து கருப்பையா, ஆரோக்கியமேரி, அவர்களுக்கு உடந்தையாக இருந்த செல்வராஜ் ஆசீர்வாதம், ராம்குமார் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்