நின்று கொண்டிருந்த லாரி மீது மினிவேன் மோதி டிரைவர் உள்பட 4 பேர் பலி
நாட்டறம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது மினிவேன் மோதியதில் டிரைவர் உள்பட 4 பேர் சம்பவ இடத்தில் பலியானார்கள். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.;
நாட்டறம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது மினிவேன் மோதியதில் டிரைவர் உள்பட 4 பேர் சம்பவ இடத்தில் பலியானார்கள். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
லாரிமீது மினி வேன் மோதல்
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள வஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் பழனி, இவரது மகன் தீனா (வயது 28). இவரது நண்பர்கள் மனோகரன் மகன் மதன் குமார் (23) மற்றும் அதே பகுதியை சேர்ந்த சரவணன் (19), ஜெகன் (26), பழனி என்பவரது மகன் கோபால கிருஷ்ணன் (16), சந்தோஷ் (23) ஆகியோர் நேற்று காலை தங்களுக்கு சொந்தமான 2 காளைகளை கிருஷ்ணகிரி அருகே மேல்மலை கிராமத்தில் நடைபெறும் எருது விடும் விழாவில் பங்கேற்க மினிவேனில் ஏற்றிச் சென்றனர்.
மினிவேனை அதேப் பகுதியை சேர்ந்த மனோகரன் மகன் நாகராஜன் (23) ஓட்டிச் சென்றார். எருது விடும் விழாவில் பங்கேற்றவிட்டு 2 காளைகளை அதே வாகனத்தில் ஏற்றிக் கொண்டு டிரைவர் உள்பட 7 பேர் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த சோதனைச்சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது அங்கு சாலையோரம் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது மினிவேன் மேதியது.
டிரைவர் உள்பட 4 பேர் பலி
இதில் மினிவேன் டிரைவர் நாகராஜன் மற்றும் முன் பக்கம் அமர்ந்திருந்த தீனா, மதன் குமார் ஆகியோர் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மினி வேனில் பயணம் செய்த சரவணன், ஜெகன், கோபாலகிருஷ்ணன், சந்தோஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு கோபாலகிருஷ்ணன் சிகிச்சை பலனினறி இறந்தார். 2 காளைகள் லேசான காயத்துடன் உயிர் தப்பியது.
இது குறித்து தகவலறிந்ததும் வாணியம்பாடி துணைபோலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன், நாட்டறம்பள்ளி இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கோர விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.