2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தைக்கு 23 ஆண்டுகள் ஜெயில் ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம்

Update: 2022-07-26 15:31 GMT

2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தைக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

சிறுமிகள்

ஈரோட்டை சேர்ந்த ஒரு தம்பதி கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு 8 வயது மற்றும் 6 வயதில் 2 மகள்கள் உள்ளனர்.

கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்தனர்.

இதையடுத்து சிறுமிகளின் தாய் திருவண்ணாமலை மாவட்டம் நல்லவன்பாளையத்தை சேர்ந்த முருகனின் மகன் கணேஷ் (வயது 28) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். கணேஷ் லாரி டிரைவராக உள்ளார்.

அதன்பிறகு மூத்த மகளை ஈரோட்டில் உள்ள பாட்டி வீட்டில் விட்டுவிட்டு அந்த பெண் கணேசுடன் இளைய மகளை மட்டும் அழைத்து கொண்டு திருவண்ணாமலைக்கு சென்றார். சுமார் 1½ ஆண்டுகளுக்கு பிறகு மூத்த மகளையும் அந்த பெண் திருவண்ணாமலைக்கு அழைத்து சென்றார்.

பாலியல் பலாத்காரம்

இந்தநிலையில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ந் தேதி அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த 2 சிறுமிகளையும் வளர்ப்பு தந்தையான கணேஷ் கொடுமை செய்ய தொடங்கினார். ஒயர், குழாய் கொண்டு சிறுமிகளை அடித்து துன்புறுத்தினார்.

மேலும், சிறுமிகளின் தாய் தூங்கிய பிறகு, அவர் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். பலமுறை சிறுமிகளை கணேஷ் பாலியல் பலாத்காரமும் செய்து உள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிறுமிகளின் தாய் அருகில் உள்ள கடைக்கு சென்றிருந்தார். அப்போது சிறுமிகளின் உடலில் பல இடங்களில் வளர்ப்பு தந்தை சூடு வைத்து உள்ளார்.

கடைக்கு சென்றுவிட்டு திரும்பிய அவரது மனைவி, மகள்கள் தீக்காயங்களுடன் அலறியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதன்பிறகு தனது 2 மகள்களையும், ஆண் குழந்தையையும் அழைத்து கொண்டு ஈரோட்டுக்கு வந்தார்.

கைது

ஈரோட்டுக்கு மனைவியை பார்ப்பதற்காக கணேஷ் வந்தார். அப்போது 2 சிறுமிகளையும் ஈரோட்டிலேயே விட்டுவிட்டு தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு கணேஷ் அழைத்து உள்ளார். அதற்கு அவர் வர மறுத்ததால், ஆண் குழந்தையையும் கொன்று விடுவதாக கணேஷ் மிரட்டல் விடுத்தார்.

மேலும், பிரச்சினைகளுக்கு 2 சிறுமிகள் தான் காரணம் என்றும், அவர்களையும் கொலை செய்து விடுவதாகவும் கணேஷ் மிரட்டினார்.

இதுகுறித்து சிறுமியின் தாய் ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு தகவல் கொடுத்தார்.

குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். அதன்பிறகு ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக கணேசை கைது செய்தனர். மேலும், அவர் மீது ஈரோடு மகளிர் கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

23 ஆண்டுகள் ஜெயில்

இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பு கூறினார். அதில், 2 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக தலா 20 ஆண்டுகள் என மொத்தம் 40 ஆண்டுகளும், சிறுமிகளை தாக்கிய குற்றத்துக்காக தலா 3 ஆண்டுகள் என 6 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டிருந்ததால் கணேசுக்கு மொத்தம் 23 ஆண்டு்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் கூடுதலாக 3 மாத சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளுக்கும் நிவாரண தொகையாக தலா ரூ.3 லட்சத்தை தமிழக அரசு ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் ஜெயந்தி ஆஜரானார்.

Tags:    

மேலும் செய்திகள்