ரோட்டோரம் விற்கப்படும் டிராகன் பழங்களை பொதுமக்கள் அதிசயமாக பார்க்கும் நிலை

குடிமங்கலம் பகுதியில் ரோட்டோரம் விற்கப்படும் டிராகன் பழங்களை பொதுமக்கள் அதிசயமாக பார்க்கும் நிலை உள்ளது.

Update: 2022-09-24 18:09 GMT

குடிமங்கலம் பகுதியில் ரோட்டோரம் விற்கப்படும் டிராகன் பழங்களை பொதுமக்கள் அதிசயமாக பார்க்கும் நிலை உள்ளது.

இறக்குமதி

பெரிய சிறகுகளுடன், பாம்பு போல நெளிந்து, வாயிலிருந்து நெருப்பைக் கக்கிக் கொண்டு திரைப்படங்களில் வரும் பிரம்மாண்டமான டிராகன்களை நமது சிறுவர்களுக்குத் தெரியும். ஆனால் டிராகன் பழங்கள் என்பது நமது ஊரில் பலருக்கும் அறிமுகம் இல்லாத ஒன்றாகவே உள்ளது. டிராகனின் முட்டைகளைப் போல உருவம் கொண்டதாக இருப்பதால் இந்த பெயர் வந்ததாக கூறப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு நகரப் பகுதிகளிலுள்ள பழ அங்காடிகளில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த டிராகன் பழங்கள் தற்போது குடிமங்கலம் பகுதி கிராமப்புற ரோட்டோரங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதற்குக் காரணம் நமது கிராம விவசாயிகளும் டிராகன் பழங்களின் சாகுபடியைத் தொடங்கியிருப்பதே ஆகும். இந்தியாவில் மகாராஷ்டிரா, குஜராத், மேற்கு வங்கம், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் டிராகன் பழங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் விருதுநகர், ஈரோடு, மதுரை, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் சிறிய அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் உடுமலை, குடிமங்கலம் பகுதிகளிலும் ஒருசில விவசாயிகள் டிராகன் பழங்கள் சாகுபடி செய்து வருகின்றனர்.

அதிக விலை

கள்ளி வகையைச் சேர்ந்த டிராகன் பழம் வெப்ப மண்டலப் பயிர் ஆகும். களிமண் தவிர்த்த, வடிகால் வசதியுடைய அனைத்து மண் வகைகளிலும் வளரக்கூடியது. குறைந்த அளவு நீர்த் தேவை உள்ள பயிராக இருப்பதால் தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் சாகுபடி செய்வதற்கு ஏற்ற பயிராகும். செடிகள் நடவு செய்து 1½ முதல் 2 ஆண்டுகளில் மகசூல் கொடுக்கத் தொடங்கும். ஆனாலும் முழுமையான மகசூல் ஈட்டுவதற்கு 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். முதல் அறுவடையில் ஆண்டுக்கு வெறும் 1 முதல் 1 ½ டன் மட்டுமே மகசூல் கிடைக்கும் நிலையில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு 8 முதல் 10 டன்கள் வரை மகசூல் கிடைக்கும். ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்ட டிராகன் பழங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதால் பலரும் இந்த பழங்களை தவிர்க்கும் நிலை உள்ளது. விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை கொள்முதல் செய்யப்படும் டிராகன் பழங்கள் வெளிச்சந்தையில் கிலோ ரூ.350-க்கு மேல் விற்கப்படுகிறது. ஒவ்வொரு பழமும் 400 கிராம் முதல் 700 கிராம் வரை எடை கொண்டதாக உள்ளது. இதனால் ஒரு பழம் ரூ.200 அளவுக்கு விற்பனை செய்யப்படுவதால் இது பணக்காரர்கள் சாப்பிடும் பழமாக உள்ளது. அத்துடன் டிராகன் பழங்களின் அழகிய இளஞ்சிவப்பு நிறம் குழந்தைகளை பெருமளவில் கவர்ந்து இழுத்தாலும் அதன் சுவை பெரிய அளவில் ரசிக்கப்படுவதில்லை.

ஆரோக்கிய மேம்பாடு

இதன் மருத்துவ குணங்களை கருத்தில் கொண்டே சிலர் இதனை வாங்கி சாப்பிடுகின்றனர். மேலும் டிராகன் பழம் உடலில் உள்ள கொழுப்புச்சத்தை குறைக்க உதவுவதால், இறந்த தேவையற்ற செல்களால் ஏற்படும் ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. அத்துடன் ரத்தக் குழாய்கள் விறைப்புத் தன்மையுடன் இருப்பதை குறைக்க உதவுகிறது. எனவே இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் பழமாக டிராகன் பழங்கள் கருதப்படுகிறது. மேலும் புற்று நோய்களைக் கட்டுப்படுத்த உதவுவதுடன் வயிறு சார்ந்த பிரச்சினைகள் மற்றும் உடல் எடை மேலாண்மையிலும் டிராகன் பழங்கள் சிறந்த பங்கு வகிக்கின்றன.

ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரித்து ரத்த சோகையை சரி செய்கிறது. கண் பார்வையை மேம்படுத்த, பசி உணர்வை அதிகரிக்க, உடல் செல்களை பழுது பார்க்க என பல வகைகளில் மனிதனின் ஆரோக்கிய மேம்பாட்டுக்கு டிராகன் பழங்கள் உதவுகிறது. குறைந்த நீரில் சாகுபடி செய்து அதிக மகசூல் ஈட்டி சிறந்த வருமானம் தரும் டிராகன் பழங்களை சாகுபடி செய்ய தோட்டக்கலைத்துறையினர் வழிகாட்டல்கள் மற்றும் உதவிகள் வழங்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்