பல்லடம்
கோவை, திருப்பூர் மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள சூலூர் விமானப் படை தளம் விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக பல்லடம் ஒன்றியம் பருவாய் கிராமத்தில் 86 ஏக்கர் 38 சென்ட் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. அதற்கான நில அளவீடு, வீட்டுமனைகள், விளை நிலங்கள், மரங்கள், ஆழ்துளை கிணறுகள் உள்ளிட்டவை குறித்து கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அளவீடு பணி செய்ய வந்த வருவாய் துறை அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து நேற்று பல்லடம் அருகேயுள்ள விமான தள விரிவாக்க பணிக்கு நிலங்கள் எடுக்கப்பட்ட உள்ள நில உரிமையாளர்கள், பொதுமக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பருவாய் ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன், முன்னாள் தலைவர் சின்னசாமி, சமூக ஆர்வலர்கள் கார்த்திகேயன், மாணிக்கம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அரசின் நில இழப்பீடு சட்டத்தின்படி நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.2 கோடியே 91 லட்சம் வழங்கிட வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்திடவும், கோரிக்கைகளை பிரதமர், முதல்வர், மத்திய, மாநில அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகளுக்கு மனுவாக அனுப்பி வைக்கவும் முடிவு செய்யப்பட்டது.