கோவில் நிலத்தில் விவசாயம் செய்ய அனுமதிக்க வேண்டும்; விவசாயிகள் மனு

பழனியில், கோவில் நிலத்தில் தொடர்ந்து விவசாயம் செய்ய அனுமதிக்க கோரி விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Update: 2022-08-08 16:27 GMT

பழனியில், கோவில் நிலத்தில் தொடர்ந்து விவசாயம் செய்ய அனுமதிக்க கோரி விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

விவசாயம் செய்ய அனுமதி

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் விசாகன் தலைமையில் நடைபெற்றது. இதில் தேசிய நெடுஞ்சாலை நிலம் எடுப்பு பிரிவு மாவட்ட வருவாய் அலுவலர் சேக்முகைதீன், கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் அமர்நாத் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் அடிப்படை வசதிகள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 274 பேர் மனு கொடுத்தனர். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் விசாகன் உத்தரவிட்டார்.

இதில் பழனி பகுதியை சேர்ந்த விவசாயிகள் கொடுத்த மனுவில், பழனி தாலுகா அய்யம்புள்ளி, அ.கலையம்புத்தூர், ஆயக்குடி உள்ளிட்ட கிராமங்களில் பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான நன்செய் நிலங்கள் உள்ளன. அந்த நிலங்களில் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருவதோடு, குத்தகை தொகையை செலுத்தி வருகிறோம். இந்த நிலையில் கோவில் நிலத்தை ஏலமிடப்போவதாக அலுவலர்கள் கூறுகின்றனர். இதனால் ஏராளமான விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே கோவில் நிலத்தில் தொடர்ந்து விவசாயம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

கல்குவாரி

ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பா.ஜனதா செயலாளர் ஜெகதீசன் கொடுத்த மனுவில், ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் கிராமப்பகுதியில் பன்றி பண்ணை செயல்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பன்றி பண்ணையை அகற்ற வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் ரெட்டியார்சத்திரத்தை அடுத்த கதிரனம்பட்டியை சேர்ந்த மல்லையன் கொடுத்த மனுவில், ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் அரசு விதிகளுக்கு புறம்பாக செயல்பட்ட சில கல்குவாரிகள் மூடப்பட்டன. இதற்கிடையே மீண்டும் கல் குவாரி உரிமம் வழங்குவது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் பொதுமக்களிடம் முறையாக கருத்து கேட்கப்படவில்லை. எனவே பொதுமக்களை நேரடியாக சந்தித்து கருத்து கேட்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்