கள்ளக்குறிச்சி கலவரம்: அரசுக்கும், காவல்துறைக்கும் இடைவெளியை காட்டுகிறது- முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
கள்ளக்குறிச்சி கலவரம் தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் உள்ள இடைவெளியை காட்டுகிறது என்று முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்
கடையநல்லூர்:
கள்ளக்குறிச்சி கலவரம் தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் உள்ள இடைவெளியை காட்டுகிறது என்று முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
பொன்.ராதாகிருஷ்ணன்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா திருமலைக்கோவில் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தென்காசி மாவட்ட பா.ஜனதா கட்சி செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-வது மாடியில் இருந்து மாணவி குதித்து உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது. இதுகுறித்து, மாணவியின் பெற்றோர் கொலை என சந்தேகப்படும் சூழலில் இதுகுறித்து உரிய முறையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அரசு தெளிவாக விளக்க வேண்டும். பள்ளியில் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்க கவுன்சிலிங் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
இடைவெளி
கள்ளக்குறிச்சி கலவரம் குறித்து முதல்-அமைச்சர் ஒரு தகவலை கூறும் நிலையில், தமிழக காவல்துறை தலைவர் ஒரு தகவலை கூறுகிறார். இது அரசுக்கும், காவல்துறைக்கும் இடையே உள்ள இடைவெளியை காட்டுகிறது. தற்போது அரசுக்கும், காவல்துறைக்கும் உள்ள இடைவெளி போலவே தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கும் பெரிய இடைவெளியாக காணப்படுகிறது. ஆகவே தமிழக காவல்துறையும், தமிழக அரசும் இந்த பிரச்சினையில் விரைந்து செயல்பட்டு உண்மைத்தன்மையை வெளிக்கொணர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவரிடம், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டது குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், தற்போது அதுகுறித்து நான் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை. நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான எம்.எல்.ஏ. கூட்டமாகவே நான் கருதுகிறேன், என்றார்.
மேலும், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மனு கொடுக்க வந்தவரை பேப்பரால் தட்டிய விவகாரத்தில் பா.ஜ.க. உயர்மட்ட தலைவர்கள் இரு விதமான கருத்துக்களை கூறிய நிலையில், அது குறித்தும் தான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை, என்றார்.
செயற்குழு கூட்டம
தென்காசி மாவட்ட பா.ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர்கள் பாலகுருநாதன், ராமநாதன், அருள்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தேனி மாவட்ட பார்வையாளர் பார்த்தசாரதி ஆகியோர் பார்வையாளராக கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தென்காசி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு சட்ட விரோதமாக கனிமவள ஏற்றுமதியை தடுத்து நிறுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கரன்கோவில் கோவிலில் அடிப்படை வசதிகளை வருகிற ஆடித்தபசு திருவிழாவிற்கு முன் செய்து கொடுத்திட நடவடிக்கை எடுத்திட செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
வாஞ்சிநாதன் மணிமண்டபம்
செங்கோட்டை முத்துசாமி பூங்காவில் சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் அவரது வாழ்க்கை வரலாறு சம்பந்தமான புகைப்படங்களும், புத்தகங்களும் அமைப்பதற்கு செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
சங்கரன்கோவில், புளியங்குடி, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, சுரண்டை ஆகிய 6 நகராட்சிகளிலும் பாதாள சாக்கடை திட்டத்தை அமல்படுத்திட தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் சேர்த்துக்கொள்கிறது.
சுரண்டையில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். கருப்பாநதி அணையில் இருந்து வரும் நீர்வழிப்பாதை பகுதிகளை கடையநல்லூர் நகரில் முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதை கடையநல்லூர் நகராட்சி அகற்றிட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் தென்காசி வடக்கு ஒன்றிய தலைவர் அய்யப்பன் நன்றி கூறினார்.