முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் நினைவு நாள்: ஒ. பன்னீர் செல்வம் அஞ்சலி
இன்று முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் 7ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஒ. பன்னீர் செல்வம் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
சென்னை,
2015 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி ஷில்லாங் பகுதியில் மாணவர்கள் மத்தியில் பேசி கொண்டிருந்த போது மாரடைப்பு காரணமாக அப்துல் கலாம் உயிரிழந்தார். அவரது சொந்த ஊரான ராமேஸ்வரம் அருகில் உள்ள பேய்க்கரும்பு எனும் இடத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் அமைக்கப்பட்டது. இன்று 7ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில் ஒ. பன்னீர் செல்வம் தன் டுவிட்டரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இந்திய நாட்டின் தென்கோடியில் எளிமையான குடும்பத்தில் பிறந்து, தன்னுடைய தொழில்நுட்ப அறிவால் வளர்ச்சியடைந்து, வளமான இந்தியாவை உருவாக்கப் பாடுபட்டவரும், இந்திய குடியரசத் தலைவர் பதவியை வகித்தவருமான 'பாரத ரத்னா'டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளினை முன்னிட்டு அவருக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.
அவரது நினைவு நாளான இன்று "கனவு, கனவு, கனவு, இதனை சிந்தனை வடிவமாக்குங்கள், பின் செயலாற்ற முனைப்படுங்கள்" என்ற அவரது அறிவுரையை பின்பற்ற உறுதி ஏற்போம்! என அதில் தெரிவித்துள்ளார்.