பேரறிவாளன் விடுதலையை கொண்டாடுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது- முன்னாள் பெண் போலீஸ் அதிகாரி

பேரறிவாளன் விடுதலையை கொண்டாடுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது என முன்னாள் பெண் போலீஸ் அதிகாரி அனுசியா தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-19 20:37 GMT

ராஜீவ் படுகொலை

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ந்தேதி ஸ்ரீபெரும்புதூர் வந்தபோது குண்டுவெடிப்பில் பலியானார். இதில் போலீஸ் அதிகாரிகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். நாட்டை உலுக்கிய இந்த படுகொலை சம்பவத்தில் குற்றவாளிகளாக நளினி, பேரறிவாளன், சாந்தன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த படுகொலை சம்பவத்தின்போது ராஜீவ்காந்தி அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அப்போதைய காஞ்சீபுரம் மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அனுசியா டெய்சி எர்னஸ்டும் படுகாயம் அடைந்து உயிர் பிழைத்தார். பின்னர் அவர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிறார். பேரறிவாளன் விடுதலை குறித்து அனுசியா டெய்சி எர்னஸ்ட் நிருபரிடம் கூறியதாவது:-

18 பேர் உயிரிழப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை என் வாழ்நாளில் மிகப்பெரிய சோக நாள் ஆகும். இந்த படுகொலை சம்பவத்தில் 9 போலீசார் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். என்னுடன் சேர்த்து 45 பேர் காயம் அடைந்தனர். என் உடலை சிதைத்த குண்டின் ரவைகளை அகற்றும்போது நான் பட்ட வேதனை சொல்லி மாளாது. காயத்தின் சுவடுகளுடன், சொல்லமுடியாத வேதனையுடனும் காலத்தை கழித்து கொண்டிருக்கிறோம். இந்த படுகொலையில் தனு, சிவராசன், நளினி, சுபா ஆகிய குற்றவாளிகளை கண்ணால் கண்ட சாட்சி நான்தான்.

ரண வேதனை

இந்தநிலையில் பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்துள்ளது. ஏதோ பெரிய சாதனை செய்துவிட்டது போல அவரை வாழ்த்துகிறார்கள். சுதந்திர போராட்ட தியாகி போல கொண்டாடுகிறார்கள். ஒரு நாட்டின் தலைவரை கொன்ற குற்றவாளியை இந்த சமூகம் தலையில் தூக்கி கொண்டாடுவதை பார்க்கும்போது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல ரணவேதனையாக வலிக்கிறது.

கருப்பு நாள்

பேரறிவாளன் இத்தனை ஆண்டுகள் சிறையில் கழித்துவிட்டார், பாவம் என்று பேசுபவர்கள், என்னை போன்றோர் நடைபிணமாய் வாழ்வதை நினைத்து பார்க்காதது ஏன்?. எங்கள் மனவேதனையை யாரும் எண்ணி பார்க்காதது ஏன்?.

என்னை பொறுத்தவரை இந்தநாள் மிகப்பெரிய கருப்பு நாள். இவ்வாறு அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்