முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுரு மீதான வழக்கு ரத்து
கள்ளக்குறிச்சி பொதுக்கூட்டத்தில் வருத்தம் தெரிவித்ததால் முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுரு மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது.;
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் மதுரை மாநாடு தீர்மானத்தின் விளக்க பொதுக்கூட்டம் கடந்த மாதம் 19-ந்தேதி நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான குமரகுரு கலந்து கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவதூறாக பேசினார்.
இது குறித்து தி.மு.க. ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் கொடுத்த புகாரின் பேரில் குமரகுரு மீது 4 பிரிவின் கீழ் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் குமரகுரு மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி, பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை ஆபாசமாக பேசியதற்காக அதே இடத்தில் மீண்டும் பொதுக்கூட்டம் கூட்டி குமரகுரு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
வழக்கு ரத்து
இதனைதொடர்ந்து கடந்த 10-ந் தேதி கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுரு வருத்தம் தெரிவித்தார். எனவே இந்த வழக்கை ரத்து செய்ய தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார். அதன்பேரில் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் குமரகுரு மீது பதிவுசெய்யப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டது.
இதற்கான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.