தொழிலக பாதுகாப்பு முன்னாள் இயக்குனருக்கு 7 ஆண்டுகள் சிறை
தொழிலக பாதுகாப்பு முன்னாள் இயக்குனருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஆலையை மூட உத்தரவு
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் நிறுவனத்தில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த விபத்து தொடர்பாக அந்த ஆலையை ஆய்வு செய்த அதிகாரிகள், அங்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை என்று கூறி ஆலையை மூட உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து ஆலை நிர்வாகம் சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதனடிப்படையில் ஆலையை மீண்டும் இயக்குவதற்கு உத்தரவிடக்கோரி அப்போது சென்னையில் உள்ள தொழிற்சாலைகளின் தலைமை ஆய்வாளராக இருந்த இளங்கோவனை அணுகினர்.(ெதாழிற்சாலைகளின் தலைமை ஆய்வாளர் என்பதன் தற்போதைய பதவிநிலை, சென்னை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் ஆகும்).
ரூ.2 லட்சம் லஞ்சம்
அதற்கு இளங்கோவன், ஆலையை திறக்க உத்தரவிடுவதற்கு ரூ.5 லட்சம் லஞ்சமாக கேட்டுள்ளார். அதற்கு முன்தொகையாக ரூ.2 லட்சம் தரும்படி கூறியுள்ளார். மேலும் அந்த தொகையை திருச்சிக்கு வந்து பெற்றுக்கொள்வதாகவும் கூறினார். இதையடுத்து கடந்த 2008-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந் தேதி இரவு திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே ஒரு ஓட்டலில் தங்கியிருந்த இளங்கோவனிடம், சம்பந்தப்பட்ட ஆலை நிறுவனத்தின் மேலாளர்கள் சற்குணன், ஜோசப் பிரீஸ் ஆகியோர் லஞ்சப்பணத்தை கொடுக்க போவதாக அப்போதைய திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு அம்பிகாபதிக்கு தொலைபேசி மூலம் ரகசிய தகவல் வந்தது.
அதிரடியாக கைது
இதையடுத்து துணை சூப்பிரண்டு அம்பிகாபதி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் அந்த ஓட்டலுக்கு முன்கூட்டியே சென்று பதுங்கி இருந்தனர். அப்போது லஞ்சமாக ரூ.2 லட்சத்தை இளங்கோவனிடம் கொடுத்தபோது, அவரது அறைக்குள் அதிரடியாக புகுந்து அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, அவரை சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.இந்த வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞராக சுரேஷ்குமார் ஆஜரானார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக கோர்ட்டில் விசாரணையில் இருந்து வந்த நிலையில், தற்போது விசாரணை முடிவுற்று, நீதிபதி கார்த்திகேயன் நேற்று தீர்ப்பு கூறினார்.
7 ஆண்டுகள் சிறை தண்டனை
அந்த தீர்ப்பில், லஞ்சம் கேட்ட குற்றத்துக்காக சென்னை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார முன்னாள் இயக்குனர் இளங்கோவனுக்கு ஓராண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. ேமலும் அரசு பதவியை தவறாக பயன்படுத்தி லஞ்சப்பணம் கேட்டுப்பெற்ற குற்றத்துக்காக 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்ததோடு, மேற்படி தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து இளங்கோவன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.