தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலியானார்.
விவசாயி
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஒம்மண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சம்பங்கி (வயது 61). விவசாயி. இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வேலை செய்வதற்காக நேற்று காலை அருகில் உள்ள கிராமங்களில் இருந்து கூலிக்கு ஆட்களை அழைத்து வந்தார்.
வேலை முடிந்த பிறகு அவர்களை தனது டிராக்டரில் ஏற்றி, வீடுகளுக்கு அழைத்து சென்றார். அனைவரையும் இறக்கி விட்டபிறகு, சம்பங்கி தனது வீட்டுக்கு டிராக்டரில் திரும்பி கொண்டிருந்தார்.
டிராக்டர் கவிழ்ந்து பலி
கோலட்டி பகுதியில் சென்றபோது டிராக்டர் திடீரென அவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்தது. இதில் டிராக்டர் அடியில் சிக்கி சம்பங்கி உடல் நசுங்கி பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார் டிராக்டரை அப்புறப்படுத்தி அவரது உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.