குளச்சலில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு சிலை ;நகரசபை கூட்டத்தில் தீர்மானம்

குளச்சலில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு சிலை அமைப்பது என நகரசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-07-29 18:17 GMT

குளச்சல், 

குளச்சலில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு சிலை அமைப்பது என நகரசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நகரசபை கூட்டம்

குளச்சலில் நகரசபை சாதாரண கூட்டம் தலைவர் நசீர் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ஷெர்லி பிளாரன்ஸ், ஆணையர் (பொறுப்பு) ஜீவா, மேலாளர் பிரேமா, சுகாதார ஆய்வாளர் தங்க பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசினர். அப்போது நடந்த விவாதம் வருமாறு:

குடிநீர் இணைப்புக்கு ரூ.7 ஆயிரம்

வினேஷ் (சுயேச்சை):- குடிநீர் இணைப்பு பராமரிப்பிற்கு பிளம்பர் ஒருவர் ரூ.7 ஆயிரம் வாங்கி உள்ளார்.

ஆணையர்:- நகராட்சி உரிமை பெற்ற பிளம்பர்கள் கிடையாது. நாங்கள் சென்டேஜ் கட்டணம் பெற்று பணி அனுமதி தான் வழங்குவோம். வெளி ஆட்களை வைத்து தான் வீட்டில் உள்ளவர்கள் வேலை செய்ய வேண்டும்.

ரகீம் (தி.மு.க.):- அந்த பிளம்பரிடம் வேலை செய்ய வேண்டாம் என கூறுங்கள்.

ஜாண்சன் (தி.மு.க.):- நகராட்சிக்கு பிளம்பர்களை நியமிக்க வேண்டும்.

ஆணையர் :- இனிமேல் பணி ஆணை வழங்கும்போது வார்டு கவுன்சிலர்களுக்கு தகவல் கூறப்படும். அவர்கள் முன்னிலையில் பணி நடக்கும். தவறு நடக்காது

சந்திரவயோலா (தி.மு.க.):- நகராட்சி அலுவலகத்திற்கு வரும் கவுன்சிலர்களுக்கு இன்னும் அறை ஒதுக்கவில்லை.

தலைவர்:-நகரமைப்பு ஆய்வாளர் அறையை கவுன்சிலர்களுக்கு ஒதுக்குவோம். நகரமைப்பு ஆய்வாளருக்கு வேறு அறை உள்ளதா? என ஆணையரிடம் கேட்டார்.

ஆணையர்:- வேறு அறை உள்ளது.

கருணாநிதிக்கு சிலை

ஆறுமுகராஜா (அ.தி.மு.க.):- முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு காந்தி சந்திப்பில் சிலை அமைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நான் எதிர்க்கிறேன். பட்டா நிலத்தில் சிலை அமையுங்கள்.

சுரேஷ்குமார் (பா.ஜ.க.) :- முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு சிலை அமைப்பதை நான் கண்டிக்கிறேன்.

ரகீம் (தி.மு.க.):- முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு சிலை அமைப்பதை கவுன்சிலர் எப்படி கண்டிக்கலாம். அதை வாபஸ் பெற வேண்டும். (உடனே மற்ற தி.மு.க. கவுன்சிலர்களும் அதே கருத்தை தெரிவித்தனர்.)

சுரேஷ் குமார்:- பட்டா நிலத்தில் சிலை அமைக்க வேண்டும். நான் அதை எதிர்க்கவில்லை.

தலைவர்:-அரசு அனுமதியுடன் தான் சிலை அமைக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

பின்னர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு சிலை அமைப்பது உள்பட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்