தலைமை செயலகத்தில் பணியில் இருப்பதாக கூறி அரசு வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.16½ லட்சம் மோசடி- 2 பேருக்கு வலைவீச்சு

தலைமை செயலகத்தில் பணியில் இருப்பதாக கூறி அரசு வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.16½ லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-07-08 22:48 GMT

அந்தியூர்

தலைமை செயலகத்தில் பணியில் இருப்பதாக கூறி அரசு வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.16½ லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தலைமை செயலகத்தில்...

அந்தியூர் அருகே உள்ள சிந்தாகவுண்டம்பாளையம் அம்மன் கோவில் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அங்கமுத்து (வயது 32). இவர் வேலை தேடி வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு ஈரோட்டை சேர்ந்த குருதேவ் என்பவர் அறிமுகமானார். அவர் தன்னுடைய கல்லூரி நண்பர் என்று கூறி ராஜேஷ்குமார் என்பவரை அங்கமுத்துவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

அப்போது ராஜேஷ்குமார் அங்கமுத்துவிடம், நான் சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரிந்து வருகிறேன். உங்களுக்கு அரசு வேலை வாங்கித் தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறி உள்ளார்.

சந்தேகம்

இதனை உண்மை என்று நம்பிய அங்கமுத்து ராஜேஷ்குமார் கூறிய வங்கி கணக்கில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 28-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 2-ந் தேதி வரை பல தவணைகளில் ரூ.16 லட்சத்து 50 ஆயிரம் செலுத்தியுள்ளார். ஆனால் அவர் வேலை வாங்கி தரவில்லை. பணத்தை திருப்பி தராமலும் இருந்து வந்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த அங்கமுத்து சென்னை தலைமை செயலகம் சென்று விசாரித்துள்ளார். அப்போது ராஜேஷ்குமார் அந்த அலுவலகத்தில் பணிபுரியவில்லை என்பது தெரிய வந்தது.

வலைவீச்சு

இதைத்தொடர்ந்து குருதேவையும், ராஜேஷ்குமாரையும் அங்கமுத்து, பல முறை போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர்கள் பல காரணங்கள் கூறி சமாளித்து வந்துள்ளனர். மேலும் இனிமேல் தங்களை நேரிலோ அல்லது போன் மூலமோ தொடர்பு கொண்டால் கொலை செய்துவிடுவோம் என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த அங்கமுத்து இதுபற்றி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க அந்தியூர் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி குருதேவ், ராஜேஷ்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவான 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்