தேவாலாவில் பெண்ணை மிதித்துக்கொன்ற காட்டு யானையை பிடிக்க வன அதிகாரிகள் ஆலோசனை- கும்கி யானைகளுடன் தொடர்ந்து கண்காணிப்பு
தேவாலாவில் பெண்ணை மிதித்துக்கொன்ற காட்டு யானையை பிடிப்பது குறித்து வன அதிகாரிகள், ஊழியர்கள் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து கும்கி யானைகளுடன் கண்காணித்து வருகின்றனர்.
கூடலூர்
தேவாலாவில் பெண்ணை மிதித்துக்கொன்ற காட்டு யானையை பிடிப்பது குறித்து வன அதிகாரிகள், ஊழியர்கள் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து கும்கி யானைகளுடன் கண்காணித்து வருகின்றனர்.
யானையை பிடிக்கக்கோரி மறியல்
கூடலூர் தாலுகா தேவாலா வாழவயல் பகுதியைச் சேர்ந்த பாப்பாத்தி (வயது 56) என்பவர் கடந்த 19-ந் தேதி வீட்டில் இருந்தபோது காட்டு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும் அவரது அண்ணன் ராமலிங்கம் படுகாயத்துடன் உயிர் தப்பினார். இந்த சம்பவத்தால் தேவாலா பகுதி மக்கள் கடும் அச்சமடைந்தனர்.
தொடர்ந்து குறிப்பிட்ட காட்டு யானை வீடுகள், கடைகளை உடைத்து உணவு பொருட்களை தின்று பழகி விட்டது. எனவே அதைப் பிடித்து முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி பலியான பாப்பாத்தியின் உடலை எடுக்க விடாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வனத்துறை சார்பில் எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கப்பட்டது. இருப்பினும் வனத்துறை தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதாக கூறி நேற்று முன்தினம் மாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வன ஊழியர்கள் ஆலோசனை
இதைத்தொடர்ந்து தேவாலா பகுதியில் அட்டகாசம் செய்து வரும் காட்டு யானையை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட தமிழக முதன்மை தலைமை வன பாதுகாவலர் சீனிவாச ரெட்டி உத்தரவிட்டார். தொடர்ந்து துறை ரீதியாக உத்தரவு நகல் அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து முதுமலையிலிருந்து விஜய், வசிம் கும்கி யானைகள் தேவாலாவுக்கு வரவழைக்கப்பட்டது.
இந்த நிலையில் காட்டு யானை பிடிப்பது குறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ் தலைமையில் நாடுகாணி தாவரவியல் மைய அரங்கில் நேற்று பகல் 12 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூடலூர் கோட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம், புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார், வனச்சரகர்கள் சஞ்சீவி, வீரமணி, ரவி, அய்யனார் உள்பட வன ஊழியர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து காட்டு யானையை அடையாளப்படுத்தி கண்காணிப்பது, அதை பாதுகாப்பான இடத்துக்கு விரட்டி சென்று பிடிப்பது குறித்து வன அதிகாரிகள், ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் வன ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.