வனத்துறையினர் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி
தேன்கனிக்கோட்டை, வேப்பனப்பள்ளி பகுதிகளில் வனத்துறையினர் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி சென்றனர்.
தேன்கனிக்கோட்டை, வேப்பனப்பள்ளி பகுதிகளில் வனத்துறையினர் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி சென்றனர்.
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை வனச்சரக பகுதியில் வனத்துறை கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், அதனை மீறினால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் வனத்துறையினர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர். தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் சென்று கிராம பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதன் ஒரு பகுதியாக தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேசன் தலைமையில் பெட்டமுகிலாளம், கொடகரை, குல்லட்டி, கோட்டையூர் கொல்லை ஆகிய பகுதிகளில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் வனத்துறையினர் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
வேப்பனப்பள்ளி
வேப்பனப்பள்ளியில் கிருஷ்ணகிரி வனக்காப்பாளர் சம்பத்குமார் தலைமையில் கள்ள துப்பாக்கியை ஒழிப்போம், யானைகளை காப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
வேப்பனப்பள்ளி, கொங்கனப்பள்ளி சாலையில் நடந்த நிகழ்ச்சியில் வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகளை வைத்திருந்தால் அவற்றை வருகிற 19-ந் தேதிக்குள் வனத்துறை அல்லது ஊர் முக்கிய பிரமுகர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அப்படி யாராவது வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் வனக்காப்பாளர்கள் அண்ணாதுரை, தேவனந்தன், வெங்கடாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.