மர கன்றுகளை நட்டு வனப்பகுதிகளை மேம்படுத்த வேண்டும்

மரக்கன்றுகளை நட்டு வனப்பகுதிகளை மேம்படுத்த வேண்டும் என்று தமிழக திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை சிறப்பு செயலர் ஹர்சஹாய் மீனா தெரிவித்து உள்ளார்.

Update: 2022-10-19 18:45 GMT


மரக்கன்றுகளை நட்டு வனப்பகுதிகளை மேம்படுத்த வேண்டும் என்று தமிழக திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை சிறப்பு செயலர் ஹர்சஹாய் மீனா தெரிவித்து உள்ளார்.

ஆலோசனை கூட்டம்

கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கோவை, ஈரோடு, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கான நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்த மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் திட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழக திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை சிறப்பு செயலர் ஹர்சஹாய் மீனா தலைமை தாங்கினார். இதில் கலெக்டர்கள் சமீரன் (கோவை), கிருஷ்ணனுண்ணி (ஈரோடு), அம்ரித் (நீலகிரி), திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், நீடித்த வளர்ச்சி இலக்குகளின் ஆலோசகர் சுஜாதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சிறப்பு செயலர் ஹர்சஹாய் மீனா பேசியதாவது:- வருகிற 2030-ம் ஆண்டுக்குள் கல்வி, பொதுசுகாதாரம், பாலின வேறுபாடுகளை அகற்றுதல், பொருளாதாரம், சுற்றுச்சூழல் போன்றவைகளில் நீடித்த நிலையான வளர்ச்சியை அடையும் நோக்கில் ஐக்கியநாடுகள் சபையால் 17 இலக்குகள் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு உலக அளவில் வளர்ச்சிப் பாதையில் சென்றிடவேண்டும் என்ற நோக்கத்துடனும், மக்கள் நலத்திட்டப்பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இத்திட்டங்கள் மூலம் மாவட்டம், வட்டாரங்களில் ஏற்பட்டுள்ள நீடித்த நிலையான வளர்ச்சியை கண்காணித்து தர வரிசை வழங்கும் பொருட்டு மாவட்ட வாரியான குழுக்கள் உருவாக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

வனப்பகுதிகள்

மேலும் வனப்பகுதிகளில் ஆலமரம், புளி, அத்தி உள்ளிட்ட மரக்கன்றுகளை அதிகமாக நட்டு வனப்பகுதிகளை மேம்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் உபயோகத்தினை முற்றிலும் தவிர்க்கும் வகையில் முதல்-அமைச்சரின் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பட்டினியை ஒழித்தல், உணவு பாதுகாப்பையும் ஊட்டச்சத்து மேம்பாட்டையும் அடைதல், நிலையான நீர் மேலாண்மையின் வாயிலாக அனைவருக்கும் குடிநீர் மற்றும் சுகாதார வசதி கிடைக்கப் பெறுவதை உறுதி செய்தல், பல்லுயிர் இழப்பை தடுத்து நிறுத்துதல் உள்ளிட்ட இலக்குகள் குறித்தும் அரசின் திட்டங்கள் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் கோவை மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், புள்ளியல் துறை மண்டல இணை இயக்குனர் (பொறுப்பு) அமுதவள்ளி, துணை இயக்குனர்கள் இசக்கியப்பன், ஜான்சுந்தர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தமிழ்செல்வி, திட்ட அலுவலர் பாஸ்கர், மற்றும் ஈரோடு, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்