மலை ரெயிலை வாடகைக்கு எடுத்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
மலை ரெயிலை வாடகைக்கு எடுத்து குன்னூருக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்தனர்.
ஊட்டி,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் சுற்றுலா பயணிகள் பயணிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ஊட்டி மலை ரெயிலுக்கு யுனெஸ்கோ அமைப்பு பாரம்பரிய அந்தஸ்து வழங்கி உள்ளது. மலை ரெயிலில் பயணம் செய்யும் போது, குகைகள், தேயிலை தோட்டங்கள், நீர்வீழ்ச்சிகள், இயற்கை அழகு, வனவிலங்குகளை கண்டு ரசித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு மலை ரெயிலை வாடகைக்கு எடுத்து பூட்டான் நாட்டு சுற்றுலா பயணிகள் பயணம் செய்தனர். இந்த ரெயில் நேற்று காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு, மதியம் 1 மணிக்கு குன்னூரை வந்தடைந்து. ரெயிலில் பூட்டானை சேர்ந்த 13 பேர் வந்திறங்கினர். அவர்கள் அங்கிருந்து கார் மூலம் சுற்றுலா தலங்களை பார்வையிட சென்றனர். அமெரிக்காவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஆஷிஷ் என்பவர் தனது சொந்த நாடான பூட்டானில் இருந்து உறவினர்கள் 13 பேருடன் மலை ரெயிலில் வந்தார். இவர் ரூ.4.80 லட்சம் கட்டணம் செலுத்தி தனியாக மலை ரெயிலை வாடகைக்கு எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.