சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கானதேர்வை 5,871 பேர் எழுதினர்

சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை கோவையில் 5,871 பேர் எழுதினார்கள்.

Update: 2023-08-25 19:15 GMT
கோவை


சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை கோவையில் 5,871 பேர் எழுதினார்கள்.


சப்-இன்ஸ்பெக்டர் பணி


தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு தமிழ்நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. கோவையில் பி.எஸ்.ஜி. கல்லூரி, இந்துஸ் தான் கல்லூரி, என்.ஜி.பி. கல்லூரி, கொங்குநாடு கல்லூரி ஆகிய 4 மையங்களில் இந்த தேர்வு நடந்தது.


கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் நடந்த எழுத்து தேர்வில் பெண்கள் மட்டும் பங்கேற்றனர். 4 மையங்களிலும் மொத்தம் 7805 பேர் எழுத்து தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். 5,871 பேர் தேர்வு எழுதினார்கள். 1,934 பேர் தேர்வு எழுத வரவில்லை.


அதிகாரிகள் ஆய்வு


இந்த 4 மையங்களுக்கான சூப்பர் செக்கிங் அதிகாரியாக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டு இருந்தார். அவர், 4 மையங்களுக்கும் நேரில் சென்று எழுத்து தேர்வு நடப்பதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


இது போல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனும் தேர்வு மையங்களை பார்வையிட்டார். எழுத்து தேர்வு நடைபெற்ற மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சோதனைக்கு பின்னரே தேர்வர்கள் மையத்துக்குள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.


உடல், மருத்துவ தகுதி


மேலும் அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. தேர்வு சரியான முறையில் நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு இருந்தது. எழுத்து தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு அடுத்தகட்டமாக ஓட்டம் உள்ளிட்ட உடல் தகுதி தேர்வுகள் மற்றும் மருத்துவ தகுதி தேர்வு நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்