சிவகளை அகழாய்வில் முதல் முறையாக தங்கப் பொருள் கண்டுபிடிப்பு...!
சிவகளையில் நடந்து வரும் அகழாய்வு பணியில் முதல் முறையாக தங்கப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஏரல் ,
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சிவகளை பரும்பு பகுதியில் தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் 3-வது கட்டமாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.
இங்கு நடைபெற்ற அகழாய்வு பணியில் ஏராளமான முதுமக்கள் தாழிகள், பழங்கால மண்பாண்ட பொருட்கள், இரும்பு, வெண்கலன்கள், பொருட்கள், சங்கு பொருட்கள், நெல்மணிகள் போன்றவை கண்டறியப்பட்டது.
இங்கு கண்டெடுக்கப்பட்ட நெல்மணிகள் சுமார் 3,200 ஆண்டுகள் பழமையானது என உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் ரூ.29 லட்சம் மதிப்பில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதற்கான சிவகளை பரும்பு மற்றும் ஸ்ரீமூலக்கரை பகுதியில் இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்திலும், பரக்கிராமபாண்டி திரடு, பொட்டல்கோட்டை திரடு பகுதியில் முன்னோர்களின் வாழ்ந்த பகுதிகளை கண்டறிய 20-க்கும் மேற்பட்ட குழிகள் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த அகழாய்வு பணியில் அகழாய்வு பணி இயக்குனர் பிரபாகரன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதில் சிவகளை பரும்பு மற்றும் ஸ்ரீமூலக்கரையில் 50-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பராக்கிரமபாண்டி திரட்டில் தற்போது நடைபெற்று வரும் ஆய்வு பணியில் சுடும் மண்ணால் செய்யப்பட்ட தக்கலை சாதனம், புகைப்பான், ஆட்ட காய்கள், பாசிமணிகள் ,வளையல் துண்டுகள், காதணிகள், எலும்பால் செய்யப்பட்ட கூர்மனை கருவிகள், முத்திரைகள் உள்பட 80 தொல்லியல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சங்க காலத்து சேர்ந்த செங்கல் கட்டுமான அமைப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த செங்கல் கட்டுமானத்தின் உள்ள ஒரு செங்கல் 25 சென்டிமீட்டர் நீளமும்,16 சென்டிமீட்டர் அகலமும், 5 சென்டிமீட்டர் உயரமும் உள்ளதாக உள்ளது.
இந்த நிலையில் தற்போது பராக்கிரமபாண்டி திரடு பகுதியில் நடந்து வரும் அகழாய்வு பணியில் தங்கத்தால் ஆன ஒரு பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தங்கத்தால் ஆன பொருள் என்ன என்பது தெரியவில்லை. இந்த தங்கத்தின் மேல் சிறு சிறு கோடுகள் உள்ளது. இப்பகுதியில் முதன் முதலில் தங்கம் கிடைத்துள்ளதால் ஆய்வாளர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டுள்ளது.
ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணி பொருத்தவரை இறந்தவர்களை புதைத்த இடத்தில் தான் தங்கப்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் முதன் முதலில் சிவகளை அகழாய்வு பணியில் வாழ்விடப் பகுதியில் தங்கப்பொருள் கிடைத்துள்ளது.