திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களுக்குதரமற்ற விபூதி வழங்கியவர் சஸ்பெண்டு

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களுக்கு தரமற்ற விபூதி வழங்கியவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

Update: 2023-10-22 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு இலை விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது. இதற்காக கோவில் நிர்வாகம் சார்பில், கைங்கர்யம் செய்பவர்களுக்கு படித்தரத்தில் விபூதி வழங்கப்படுகிறது. கடந்த 21-ந்தேதி கோவிலில் கைங்கர்யம் செய்த நபர், பக்தர்களுக்கு வழங்கிய விபூதியில் கலப்படம் இருந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து பக்தர்கள், கோவில் நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் உத்தரவின்பேரில், கோவில் உள்துறை அலுவலர்கள், பணியாளர்கள் விசாரணை மேற்கொண்டனர். இதில் கோவிலில் கைங்கர்யம் செய்த முத்து என்பவர் பக்தர்களுக்கு தரமற்ற விபூதி கொடுத்தது தெரிய வந்தது. அவரிடம் விசாரித்தபோது, கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவர் விபூதியை மொத்தமாக கொடுத்து, அதனை பிற பக்தர்களுக்கு வழங்க கூறியதாக தெரிவித்தார். இதையடுத்து முத்துவை கைங்கர்யம் செய்யும் பணியில் இருந்து கோவில் நிர்வாகம் சஸ்பெண்டு செய்தது.

இதுகுறித்து கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் கூறுகையில், ''திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.300 கோடியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. பக்தர்களுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. எனினும் கோவில் நிர்வாகத்திற்கும், அரசுக்கும் கெட்டப்பெயரை ஏற்படுத்தும் வகையில் சிலர் செயல்படுகின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவிலில் கைங்கர்யம் செய்தவர் வழங்கிய விபூதி, படித்தர விபூதி இல்லாமல் யாரோ தனிநபர் வழங்கிய விபூதி என்பது தெரிய வந்தது. கோவில் வளாகத்தில் பக்தர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் வகையில் செயல்படும் பச்சைகுத்துகிறவர்கள், தள்ளுவண்டி வியாபாரிகள், கிளி ஜோதிடம் பார்ப்பவர்கள், பக்தர்களை வற்புறுத்தி யாசகம் பெறும் திருநங்கைகள் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்