உடல் நலம் பாதிக்கப்பட்ட யானைக்கு சிகிச்சை அளிக்க 3-வது நாளாக வனத்துறையினர் தீவிர முயற்சி...!

உடல் நலம் பாதிக்கப்பட்ட யானைக்கு சிகிச்சை அளிக்க 3-வது நாளாக வனத்துறையினர் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.;

Update: 2022-08-18 04:48 GMT

கோவை,

கோவை அருகே ஆனைகட்டி- அட்டப்பாடி வனப்பகுதியில் உள்ள கொடுங்கையாற்றின் நடுவே 8 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டுயானை ஒன்று வாயில் காயத்துடன் நின்றிருந்தது. ஆனால் ஆக்ரோஷமாக காணப்பட்டது. இதையடுத்து கேரள, தமிழக வனத்துறையினர் இணைந்து, யானையை பிடித்து சிகிச்சை அளிக்க முடிவு செய்து, அதற்கான பணிகளில் இறங்கினர். ஆனால் திடீரென காட்டு யானை மாயமாகி விட்டது. தொடர்ந்து தமிழக, கேரள வனத்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தமிழக வனத்துறையினர் மண்டல வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியம், மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், உதவி வன பாதுகாவலர்கள் தினேஷ், செந்தில் பெரியநாயக்கன் பாளையம் வனசரகர் செல்வராஜ் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கேரள வனத்துறையினர் 4 பிரிவுகளாகப் பிரிந்து வன அலுவலர் ஜோஸ் தலைமையில் அட்டப்பாடி வனப்பகுதிகளில் யானையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் செங்குட்டை என்ற பகுதியில் யானை தென்பட்டது. உடனடியாக யானையை சுற்றி வளைக்க வனத்துறையினர் முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் மீண்டும் அந்த யானை மாயமாக மறைந்து விட்டது.

இந்நிலையில், யானை தற்போது செங்குட்டை அருகே உள்ள ஊக்கையினூர் பகுதியில் முகாமிட்டுள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்டு ஊக்கையினூர் பகுதியில் முகாமிட்டுள்ள யானைக்கு சிகிச்சை அளிக்க 3-வது நாளாக வனத்துறையினர் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்