டாஸ்மாக் கடைகளுக்கு வாரத்துக்கு 50 'பீர்' பெட்டிகள் மட்டுமே விற்பனைக்கு வருகிறதுஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் மதுப்பிரியர்கள்

டாஸ்மாக் கடைகளுக்கு வாரத்துக்கு 50 ‘பீர்’ பெட்டிகள் மட்டுமே விற்பனைக்கு வருகிறது

Update: 2023-04-19 20:54 GMT

டாஸ்மாக் கடைகளுக்கு வாரத்துக்கு 50 'பீர்' பெட்டிகள் மட்டுமே விற்பனைக்கு வருவதால் 'பீர்' கிடைக்காமல் மதுப்பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள்.

கடும் வெயில்

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. தினந்தோறும் 100 டிகிரிக்கும் மேல் வெளியில் கொளுத்தி வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இதனால் வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள பொதுமக்கள் குளிர்ச்சியான உணவுகளை எடுத்து வருகிறார்கள். இதேபோல் மதுப்பிரியர்களும் மது குடிப்பதை விட 'பீர்' குடிப்பதையே அதிகம் விரும்புகிறார்கள். இதன் காரணமாக தற்போது டாஸ்மாக் கடைகளில் 'பீர்' விற்பனை அமோகமாக உள்ளது.

அதிகமானோர் 'பீர்' பாட்டிலை வாங்குவதால் தற்போது டாஸ்மாக் கடைகளில் 'பீர்' தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. 'பீர்' வாங்க செல்லும் மதுப்பிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் 'பீர்' கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்புகிறார்கள். இதே நிலைதான் தனியார் பார்களிலும் உள்ளது. அங்கும் விற்பனைக்கு வரும் பீர்கள் உடனுக்குடன் விற்பனை ஆவதால் 'பீர்' தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

உற்பத்தி குறைவு

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 208 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இது இல்லாமல் தனியார் பார்களும் இயங்கி வருகிறது. பொதுவாக டாஸ்மாக் கடைகளுக்கு வாரத்துக்கு 2 முறை மது பானங்கள் அனுப்பி வைக்கப்படும். அப்போது 200 பெட்டிகளில் 'பீர்' பாட்டில்கள் அனுப்பப்படும். ஒரு பெட்டியில் 12 பாட்டில்கள் இருக்கும்.

ஆனால் தற்போது ஒரு டாஸ்மாக் கடைக்கு வாரத்துக்கு வெறும் 50 பெட்டிகள் மட்டுமே 'பீர்' பாட்டில்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இதுவும் அனுப்பிய நாள் அன்றே விற்று தீர்ந்து விடுகிறது. 'பீர்' தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம் 'பீர்' தயாரிக்கும் நிறுவனங்களில் தற்போது உற்பத்தியை குறைத்துள்ளது தான். குறிப்பாக வெயில் காலங்களில் 'பீர்' தட்டுப்பாடு இருக்கும். ஆனால் இந்த ஆண்டுபோல் எந்த ஆண்டும் 'பீர்' தட்டுப்பாடு இருந்ததில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

விரும்பிய ரகம் இல்லை

இதுகுறித்து மதுப்பிரியர் ஒருவர் கூறும்போது, 'டாஸ்மாக் கடைகளில் முன்பு எல்லாம் 5, 6 நிறுவனங்களின் பீர்கள் கிடைக்கும். ஆனால் தற்போது ஒன்று அல்லது 2 நிறுவனத்தின் 'பீர்' பாட்டில்கள் மட்டுமே விற்பனைக்கு உள்ளது. இதுவும் சில நேரங்களில் கிடைப்பதில்லை. இதனால் விரும்பிய ரக 'பீர்' பாட்டில்களை வாங்கி குடிக்க முடியவில்லை.

ஒரு 'பீர்' பாட்டில் ரூ.170 முதல் ரூ.190 வரை கொடுத்து வாங்குவேன். ஆனால் தற்போது அது கிடைக்காததால் டின் 'பீர்' ரூ.150 கொடுத்து வாங்குகிறேன். அது மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே டாஸ்மாக் கடைகளில் 'பீர்' பாட்டில்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்