தொடக்க பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு திட்டம்; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்
ஈரோட்டில் தொடக்க பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்.
ஈரோட்டில் தொடக்க பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்.
காலை உணவு
தமிழக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு முதல் -அமைச்சரின் காலை உணவு திட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கொல்லம்பாளையம் அரசு தொடக்க பள்ளிக்கூடத்தில், தமிழக முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் நேற்று தொடக்கப்பட்டது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் தலைமை தாங்கினார். கணேசமூர்த்தி எம்.பி. முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கலந்து கொண்டு முதல் -அமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவர்களுடன் உணவருந்தினார்.
காலை சிற்றுண்டி
அதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது:-
அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக சில மாநகராட்சி, நகராட்சிகளிலும், தொலைதூர கிராமங்களிலும் இந்த திட்டம் தொடங்கப்படுகிறது.
ஈரோடு மாநகராட்சியில் உள்ள 26 பள்ளிக்கூடங்களிலும், தாளவாடி ஊராட்சி ஒன்றியம், திகனாரை மற்றும் தாளவாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 38 பள்ளிக்கூடங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 3 ஆயிரத்து 291 மாணவ -மாணவிகள் பயன்பெறுவார்கள்.
இவ்வாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறினார்.
கூடுதல் கலெக்டர்
இதைத்தொடர்ந்து தாளவாடி ஊராட்சி ஒன்றியம், திகனாரை அரசு தொடக்க பள்ளிக்கூடத்தில் முதல் -அமைச்சரின் காலை உணவு திட்டத்தினை கூடுதல் கலெக்டர் மதுபாலன் தொடங்கி வைத்து மாணவ -மாணவிகளுடன் உணவருந்தினார்.
இதில் மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நவமணி கந்தசாமி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) மணிவண்ணன், மகளிர் திட்ட இயக்குனர் கெட்ஸி லீமா அமலினி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.