பொதுமக்களுக்கு வழங்குவதற்காக ஒரு லட்சம் மரக்கன்றுகள் பராமரிப்பு

பொதுமக்களுக்கு வழங்குவதற்காக ஒரு லட்சம் மரக்கன்றுகள் பராமரிகப்படுகிறது.

Update: 2023-04-24 19:30 GMT

தமிழகத்தில் வனப்பரப்பை அதிகரிக்கவும், சுற்றுச்சூழலை காக்கவும் அரசு சார்பில் 'பசுமை தமிழ்நாடு' என்ற திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தரிசு நிலங்கள், கல்வி நிறுவனங்களின் காலி இடங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட உள்ளது. இதற்காக அந்த பகுதிகளில் வனத்துறையின் நர்சரிகளில் மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த மரக்கன்றுகள் பொதுமக்கள், விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. அதன்படி பழனியில், தேக்கந்தோட்டம் பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான நர்சரியில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் தேக்கு, மலைவேம்பு, மகாகனி, சிவப்பு சந்தனம், குமிழ் உள்பட பல வகையான மரக்கன்றுகள் உள்ளன. வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பாக இந்த மரக்கன்றுகள் வினியோகம் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து வனச்சரகர் பழனிக்குமார் கூறுகையில், தமிழக வனப்பரப்பை 33 சதவீதமாக அதிகரிக்க இந்த திட்டம் தொடங்கப்பட்டது. பழனி பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகள், விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் நடுவதற்காக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் பராமரித்து வருகிறோம். இந்த மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி நடுவதோடு மட்டுமல்லாமல், அதை முறையாக பராமரிக்க தேவையான ஆலோசனைகளும் வழங்க உள்ளோம். எனவே மரக்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள், பொதுமக்கள் தங்கள் நிலத்தின் பட்டா, அடங்கல், நில வரைபடம், ஆதார் கார்டு ஆகியவற்றின் நகல் மற்றும் 2 புகைப்படம் போன்றவற்றை வனத்துறை அலுவலகத்தில் அளித்து முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்