கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்ட ரூ.4 லட்சம் நிதி உதவி-சபாநாயகர் அப்பாவு தகவல்

கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்ட ரூ.4 லட்சம் நிதி உதவி வழங்கப்படுகிறது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

Update: 2022-12-11 15:27 GMT

வள்ளியூர்:

ராதாபுரம் தொகுதியில் கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்ட ரூ.4 லட்சம் நிதி உதவி வழங்கப்படுகிறது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ரூ.4 லட்சம் நிதி உதவி

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் இருந்து பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு நலவாரிய வீட்டு வசதி திட்டத்தின் மூலம் வீடு கட்ட ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்குகிறது.

ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய வீட்டு வசதி திட்டத்தின் மூலம் பயன் பெற ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி அலுவலகத்தில் செயல்படும் நெல்லை மாவட்ட டாக்டர் கலைஞர் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல சங்கத்தை தொடர்பு கொண்டு, விண்ணப்பதை பூர்த்தி செய்து, தேவைப்படும் ஆவணங்களுடன் நேரில் சென்று பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க...

வீடு கட்டும் திட்டத்தில் நிதியுதவி பெறுவதற்கு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து 3 வருடங்கள் நிறைவு அடைந்திருக்க வேண்டும். கட்டுமான தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் பெயரில் குறைந்தபட்சம் 300 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். கட்டுமான தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் பெயரில் பட்டா அல்லது அரசு வழங்கியுள்ள இலவச வீட்டுமனைப்பட்டா இருக்க வேண்டும். வீடு கட்டுவதற்கான எஸ்டிமேட் பொறியாளரின் கையொப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

கட்டுமான தொழிலாளர் நல வாரிய உறுப்பினருக்கு அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான காங்கீரீட் வீடு இருக்கக்கூடாது. இதற்குட்பட்டவர்கள் தங்களது மின்னணு குடும்ப அட்டை, நல வாரிய அடையாளஅட்டை, நல வாரிய உறுப்பினரின் ஆதார் அட்டை, குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை, நடப்பாண்டின் வருமானச்சான்று மற்றும் நலவாரிய உறுப்பினரின் புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி அலுவலகத்தின் மூலம் கட்டுமானம், ஆட்டோ மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் இலவசமாக நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டை பதிவு செய்தல், புதுப்பித்தல், ஓய்வூதியம், நலத்திட்ட உதவிகளை பெற நேரில் வந்து பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்