குழந்தை திருமணம் நடத்துபவர்களுக்கு சட்டப்படி தண்டனை

குழந்தை திருமணம் நடத்துபவர்களுக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

Update: 2023-03-30 18:27 GMT

திறன் வளர்ப்பு பயிற்சி

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட பணியாளர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்பு நடைபற்றது.

கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் கட்டுப்பாட்டில் 968 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றது. அனைத்து அங்கன்வாடிகளிலும் குழந்தைகளுக்கு தயாரிக்கப்படுகின்ற உணவுகள் ஊட்டச்சத்து நிறைந்ததாகவும், சுத்தமாகவும் சுகாதாரமாகவும் தயாரித்து வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகளில் காய்கறிகளை சேர்த்து சமைக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளது. அதனை அதிகரிக்க குழந்தைகளுக்கு காய்கறிகள், கீரை வகைகள், இறைச்சிகள் அதிகளவில் வழங்கப்பட வேண்டும். அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளை சாப்பிடுவதற்கு முன்பு நன்கு கைகளை தூய்மை செய்த பிறகு உணவினை உட்கொள்ள வைக்க வேண்டும்.

சட்டப்படி தண்டனை

குழந்தை திருமணத்தை நிச்சயமாக அறவே தவிர்க்க வேண்டும். உறவுகளுக்குள் திருமணத்தையும் தவிர்க்க வேண்டும். 18 வயது நிறைவடைவதற்கு முன் திருமணத்தை மேற்கொள்கின்ற பொழுது அந்தக் குழந்தை கருவுற்ற பிறகு இறப்பு ஏற்படுவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கின்றன. அதுமட்டுமின்றி பிறக்கின்ற குழந்தை எடை குறைவாக, மாற்றுத்திறனாளியாக பிறப்பதற்கும் சாத்தியக் கூறுகள் அதிக அளவில் உள்ளது.

ஆகவே குழந்தை திருமணம் நடத்துவது குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தை திருமணத்தில் யாரெல்லாம் கலந்து கொள்கின்றார்களோ, யாரெல்லாம் திருமணத்தை நடத்துகிறார்களோ அவர்கள் அனைவருக்கும் சட்டப்படி தண்டனை வழங்கப்படும். குழந்தை திருமணத்திற்கு சென்று வந்தாலோ, அவர்களது வீட்டில் உணவு அருந்தினாலோ, மொய் மட்டும் வைத்து விட்டு வந்தேன் என்றாலும் தண்டனை உண்டு.

கலந்துகொள்வதும் குற்றம்

ஆகவே குழந்தை திருமணத்தில் கலந்து கொள்வதும், குழந்தை திருமணத்தை அதிகாரிகளுக்கு சொல்லாமல் இருப்பதும் சட்டப்படி குற்றம். குழந்தை திருமணத்தை பற்றி தகவல் தெரிந்தால் 1098 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிக்கபடுபவரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

பாலியல் குற்றங்களில் இருந்து பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். மேலும் அங்கன்வாடி மையங்களில் சிறப்பாக பணியாற்றுகின்ற பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமாவளவன், மாவட்ட சமூக நல அலுவலர் ஸ்டெல்லா, எஸ்.ஆர்.டி.பி.எஸ். சிறப்பு தத்தெடுப்பு நிறுவன இயக்குனர் தமிழரசி, வழக்கறிஞர் ராஜன்பாபு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்