முடிதிருத்துவோருக்கு ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க கோரிக்கை
நலவாரியத்தில் பதிவுசெய்துள்ள முடிதிருத்துவோருக்கு ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று சங்க கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட மருத்துவர் மற்றும் முடிதிருத்துவோர் சங்கத்தின் புதிய கிளை அமைப்பு கூட்டம் முத்தையாபுரம் சுந்தர் நகரில் நடந்தது. கூட்டத்துக்கு கவுரவ தலைவர் கே.சதாசிவம் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் இரா.பேச்சி முத்து கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். சங்க கோரிக்கைகளை விளக்கி பொதுச்செயலாளர் எஸ்.நாகராஜ் பேசினார். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். புதிய கிளை தலைவராக சுந்தரம், செயலாளராக பட்டுராஜ், பொருளாளராக சந்திரன், துணைத் தலைவர்களாக ராஜா, சிவசுப்பிரமணியம், துணை செயலாளர்களாக சுமித்ரா, மரியா ஜாக்லின் ரோசி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில் முடி திருத்துவோர் நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். முடி திருத்தும் நலவாரியங்களில் முத்தரப்பு குழு அமைத்து செயல்படுத்த வேண்டும். வீடு இல்லாத தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை அமைக்க ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு தொழில் உபகரணங்கள் வழங்க நிதி உதவி செய்ய வேண்டும். முடி திருத்துவோருக்கும், அழகு கலை நிலையங்களில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு திருமணம் உதவித்தொகை ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். சலூன் மற்றும் அழகு கலை நிலையங்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி புறநகர செயலாளர் ராஜா, ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.