வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கக்கோரிவிழுப்புரத்தில் சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதம்

வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கக்கோரி விழுப்புரத்தில், சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-12-27 18:45 GMT

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் நேற்று விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட தலைவர் மணிக்கண்ணன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வுபெற்றோர் சங்க மாநில தணிக்கையாளர் கிருஷ்ணமூர்த்தி, உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமாரி வரவேற்றார். மாவட்ட செயலாளர் மலர், கோரிக்கை விளக்கவுரையாற்றினார். மாநில துணைத்தலைவர் அபராஜிதன் நிறைவுரையாற்றினார்.

கோரிக்கைகள்

சத்துணவு உண்ணும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும், காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், சத்துணவு அமைப்பாளர்களுக்கு ஓய்வுபெறும் வயதை 60-ல் இருந்து 62 ஆக உயர்த்த வேண்டும், வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் மாவட்ட நிர்வாகிகள் சுந்தர்ராமன், வெங்கடேசன், அருளரசி, லட்சுமி, சந்திரா, சித்ரா, பவானி, ரூபிசலோமி உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த உண்ணாவிரதத்தின்போது விழுப்புரம் நகரில் அவ்வப்போது மழை பெய்தது. இருப்பினும் மழையையும் பொருட்படுத்தாமல் குடைபிடித்தபடி உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். முடிவில் மாவட்ட பொருளாளர் தேவதாஸ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்