ஊட்டியில் 2-வது சீசனுக்காகமலர் நாற்றுகள் நடும் பணி தொடக்கம்
ஊட்டி தாவரவியல் பூங்காவில், 2-வது சீசனுக்காக மலர் நாற்றுகள் நடும் பணிகள் நேற்று தொடங்கப்பட்டது.
ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில், 2-வது சீசனுக்காக மலர் நாற்றுகள் நடும் பணிகள் நேற்று தொடங்கப்பட்டது.
2-வது சீசன்
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே, மாதம் முதல் சுற்றுலா சீசன் தொடங்கும். இந்த ஆண்டு முதல் சீசனுக்கு சுமார் 8½ லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். அதற்கு அடுத்தாற்போல் செப்டம்பர் மாதத்தில் 2-வது சீசன் தொடங்கும். இந்த நிலையில் 2-வது சீசன் தொடங்குவதை முன்னிட்டு ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சிக்காக நாற்றுகள் நடவு செய்யும் பணிகள் நேற்று தொடங்கியது. இதில் கலெக்டர் அம்ரித் கலந்து கொண்டு மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணிகளை பார்வையிட்டார். தோட்டக்கலைத்துறை பணியாளர்கள் மலர் நாற்றுகளை நடவு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
3 லட்சம் சுற்றுலா பயணிகள்
இதுகுறித்து தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) ஷிப்லா மேரி கூறியதாவது:- மலர் கண்காட்சிக்காக நாட்டின் பிற மாநிலங்களான கொல்கத்தா, காஷ்மீர், பஞ்சாப், புனே, பெங்களூரு போன்ற இடங்களில் இருந்து இன்காமேரி கோல்டு, பிரெஞச் மேரி கோல்டு, ஆஸ்டர், வெர்பினா, ஜூபின், கேணீடிடப்ட், காஸ்மஸ், கூபியா, பாப்பி, ஸ்வீட் வில்லியம், அஜிரேட்டம், கிரைசாந்திமம், கலண்டுலா, சப்னேரியா உள்பட 60 வகைகளில் பல்வேறு வகையான விதைகள் பெறப்பட்டு, சுமார் 4 லட்சம் வண்ண மலர்களின் நாற்றுகள் தொட்டிகளில் நடவு செய்யப்பட்டது. இதேபோல் 15 ஆயிரம் மலர் தொட்டிகளில் சால்வியா, டெய்சி, டெல்பினியம், டேலியா, ஆந்தூரியம், கேலா லில்லி உள்பட 30 வகையான
மலர்ச்செடிகள் நடவு பணியும் தொடங்கப்பட்டது. இந்த மலர் தொட்டிகள் மலர்க்காட்சி திடலில் அடுக்கி வைக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் கண்களுக்கு விருந்தாக ஒரு மாத காலம் வரை திறந்து வைக்கப்படும்.
இந்த ஆண்டு 2-வது சீசன் மலர் கண்காட்சி செப்டம்பர் மாதம் 2-வது வாரத்தில் தொடங்கும். இந்த வருடம் சுமார் 3 லட்சம் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது அவருடன் போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், ஆர்.டி.ஓ. துரைசாமி, நகராட்சி தலைவர் வாணிஸ்வரி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் பாலசங்கர் உள்பட பலர் இருந்தனர்.