பாளையங்கோட்டையில் கால்பந்து போட்டி
பாளையங்கோட்டையில் கால்பந்து போட்டி நடந்தது.
பாளையங்கோட்டை வ.உ.சி. விளையாட்டு அரங்கில் எழுவர் ஆண்கள் அதிவிரைவு கால்பந்து போட்டி நேற்று நடந்தது. தொடக்க விழாவில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தனர். இதில் 16 அணிகள் பங்கேற்று விளையாடின.
இறுதிப்போட்டியில் மேலப்பாளையம் எம்.எம்.கால்பந்து கழக அணியும், பாளையங்கோட்டை ராபின் கால்பந்து கழக அணியும் விளையாடின. இந்த போட்டியை நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தொடங்கி வைத்தார். இதில் ராபின் கால்பந்து கழக அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்றது.
இதை தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற அணிக்கு நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி பரிசுகளை வழங்கி பாராட்டினார்.