கால்பந்து போட்டி
கடலூரில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் 54 அணிகள் பங்கேற்றனர்.
கடலூர்,
கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் கோடை கால கால்பந்து பயிற்சி கடந்த 15-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதன் நிறைவு நாளான நேற்று முன்தினம் ஒரு நாள் ஐவர் கால்பந்து போட்டி நடந்தது. இதில் கடலூர், நெய்வேலி, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து 9 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் 54 அணிகள் கலந்து கொண்டு விளையாடியது. போட்டியை மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா தொடங்கி வைத்தார். தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இதில் மாநகராட்சி கவுன்சிலர் அருள்பாபு, மூத்த கால்பந்தாட்ட பயிற்சியாளர் ரவிச்சந்திரன், வருமான வரித்துறை ஆய்வாளர் செங்குட்டுவன் ஆகியோர் கலந்து கொண்டு பரிசு வழங்கினர். இதில் நெக்சஸ் யூத் சாக்கர் அகாடமி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.