குழந்தைகள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தாகும் உணவுப்பண்டங்கள்-தாய்மார்கள் கருத்து
குழந்தைகள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தாகும் உணவுப்பண்டங்கள் குறித்து தாய்மார்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நமது வீட்டில் சமைக்கின்ற உணவுகளை மட்டுமே சாப்பிட்டுவந்த காலம் உண்டு. சாதம், இட்லி, தோசை மட்டுமே பிரதான உணவுகளாக இருந்தன.
சோளம், உளுந்து, பயிறு, கடலை, அரிசி ஏதோ ஒன்றை வறுத்துத் தருவார்கள். மிஞ்சிப் போனால் முறுக்கு, சீடை, கடலை மிட்டாய் போன்ற நொறுக்குத் தீனிகளை கடைகளில் வாங்கிச் சாப்பிடுவோம்.
அவை கலப்படம் இல்லாமலும், மண் சார்ந்த உணவுகளாகவும், சுவை குறைவாக இருந்தாலும் ஆரோக்கியம் குறைவில்லாமல் இருந்தன.
ஓட்டல்களுக்கு எப்போதோ ஒருநாள் தவிர்க்க முடியாமல் போவது உண்டு. இப்போது நிலைமை அப்படி அல்ல.
ஓட்டல்களுக்கு போவது ஒரு நாகரிகமான, கவுரவமான நடைமுறையாகி விட்டது.
மாறிவரும் உணவுப்பழக்கம்
பெரும்பாலான வீடுகளில் சமையல் அறைகள் ஓட்டல்களுக்கு போய்விட்டன. வீடுகள் தங்கும் ஓட்டல்களாக மாறிவருகின்றன. இதனால் பல்வேறு ஒவ்வாமைகள், பிரச்சினைகள் உடல்ரீதியாக நாம் சந்திக்க நேர்கின்றன.
குழந்தைகளும் இயற்கையான உணவை விட்டு செயற்கையாக செய்யப்படும் கவர்ச்சியான உணவு வகைகளையே விரும்புகிறார்கள். பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள், சாக்லெட் போன்ற தின்பண்டங்கள், எண்ணெயில் பொரித்த உணவுகள், பிசா, பர்கர் போன்ற ரெடிமேடு உணவு வகைகளுக்கும் அடிமையாகி வருகிறார்கள்.
நாகரிகம் என்ற பெயரால் மாறிவரும் இந்த உணவுப் பழக்கங்களால் ஏற்படுகின்ற சாதக பாதங்கள் குறித்து குழந்தை மருத்துவர் மற்றும் தாய்மார்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-
உடல் எடை அதிகரிக்கும்
நெல்லையை சேர்ந்த இல்லத்தரசி லலிதா:-
துரித, பாக்கெட் உணவு வகைகளை, தின்பண்டங்களை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடுகிறார்கள். பிசா, பர்கர் போன்றவை சாப்பிடுவதால் எந்த பயனும் கிடையாது, கெடுதல்தான் வருகிறது. அவற்றில் ருசியை அதிகப்படுத்த வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் உடல் எடை அதிகரிக்கும். வேலை செய்ய முடியாமல் சோர்வடைய செய்து விடும். சுறுசுறுப்பு இன்றி மந்தமாக இருப்பார்கள்.
எனவே குழந்தைகளுக்கு பழங்கள், கடலை, எள்ளு மிட்டாய் உள்ளிட்ட பாரம்பரிய தின்பண்டங்களை கொடுத்து பழக்கப்படுத்த வேண்டும். துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்.
விளையாட்டு
நெல்லை தாழையூத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் விக்டோரியா:-
அந்த காலத்தில் குழந்தைகளுக்கு பொரி உருண்டை, கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய் உள்ளிட்ட தின்பண்டங்களை வாங்கி கொடுப்போம். குழந்தைகள் காலை, மாலையில் நன்றாக விளையாடுவார்கள். விடுமுறை நாட்களில் முழு நேரமும் விளையாட்டில் ஈடுபடுவார்கள். இது அவர்களுக்கு உடலை ஆரோக்கியமாகவும், வலுவாகவும் வைத்திருக்க உதவியது.
ஆனால் தற்கால குழந்தைகள் விஞ்ஞான வளர்ச்சியால் டி.வி. பெட்டிகள் முன்பும், செல்போனிலும் மூழ்கி கிடக்கிறார்கள். விளையாட்டு மறந்து போய் விட்டது. இதன்மூலம் ஆரோக்கியம் குறைவதுடன், நவீன தின்பண்டங்கள் மேலும் குழந்தைகளை பாதிப்படைய செய்கிறது.
எனவே பெற்றோர் பழங்காலத்தை போல் சத்துள்ள தின் பண்டங்களை செய்து கொடுக்க வேண்டும். அல்லது அதுபோன்ற உணவு பொருட்களை வாங்கி கொடுத்து குழந்தைகளை பழக்கப்படுத்த வேண்டும். நன்றாக விளையாட அனுமதிக்க வேண்டும். கிராமப்பகுதியில் பெரும்பாலானோர் நீச்சல் கற்று விடுகிறார்கள். ஆனால் நகர் பகுதியில் நீச்சல் தெரியாமல் பலர் உள்ளனர். எனவே தங்களது குழந்தைகளுக்கு கண்டிப்பாக நீச்சல் கற்றுக்கொடுக்க வேண்டும்.
விழிப்புணர்வு வேண்டும்
நெல்லை உணவு பாதுகாப்பு அலுவலர் ஏ.ஆர்.சங்கரலிங்கம்:-
முன் காலத்தில் வீட்டில் எள்ளு மிட்டாய், கடலை மிட்டாய், பொரி விளங்காய் (பொரிக்கடலை மாவு, நெய், இனிப்பு) இருக்கும். அவற்றை குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். சிறுதானியங்களில் செய்த பொருட்களை கொடுப்பார்கள். பள்ளிக்கூடத்துக்கு சென்று மாலையில் வந்தால் வேர்க்கடலை, பயறு வகைகளை வேக வைத்து கொடுப்பார்கள். இவை மிகவும் சத்தானவை.
தற்போது துரித உணவும், கவர்ச்சிகரமான தின்பண்டங்களும் குழந்தைகளை கவருகிறது. இதனால் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைக்காமல் போகிறது. துரித உணவில் கலோரி மட்டும் இருக்கும். அதில் புரோட்டின் கொழுப்பு சத்து இல்லாமல் தேவையற்ற கொழுப்பு சத்து இருப்பதால் சிறு வயதிலேயே உடல் எடை அதிகரிக்கும். சிறு வயதிலேயே பெண்கள் பூப்படையும் பிரச்சினை மற்றும் பலவிதமான உடல் சம்பந்தமான நோய்களை ஏற்படுத்துகிறது. சிறுதானியங்களில் செய்த லட்டு, முளை விட்ட பயறு, வேர்க்கடலை, எள் போன்ற பொருட்களை கொடுத்தால் மிகவும் நல்லது. உளுந்து -நல்லெண்ணெய் சேர்த்து கொடுக்கும் களியில் புரத சத்தும், இரும்பு சத்தும் கிடைக்கும். இதுபோன்ற உணவு வகைகளை கொடுப்பதுடன், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
ஆரோக்கியத்தை கொடுக்கும்
தென்காசி வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த இல்லத்தரசி ராதா கிருஷ்ணம்மாள்:-
நவீன காலத்தில் நாகரிகம் வளர வளர கூடவே நோய்களும் புதிது புதிதாக உருவாகின்றன. குறிப்பாக நாம் உண்ணும் உணவில் ரசாயனங்கள் கலந்து அது நமது உடலுக்கு ஊறு விளைவிக்கிறது. இதனால் நமது குழந்தைகளுக்கும் இதன் தாக்கம் ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு சாக்லெட், பர்கர், பிசா போன்றவற்றை கொடுக்கிறார்கள். இதுபோன்ற உணவு பொருட்கள் நிச்சயமாக குழந்தைகளுக்கு ஆபத்தையே உண்டு பண்ணும். இதற்கு பதிலாக நவதானியங்கள், இயற்கை உணவு, கடலை மிட்டாய், எள்ளு உருண்டை போன்றவற்றை கொடுக்கலாம். இது குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும்.
காய்கறிகள் - கீரைகள்
சுரண்டையைச் சேர்ந்த டாக்டர் ராஜகுமார்:-
'ஜங்க் புட்' என்பது ஆரோக்கியமற்ற, அதிக இனிப்பு, உப்பு, கொழுப்பு நிறைந்த, ஊட்டச்சத்து குறைவான, நீண்ட நாட்கள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட துரித உணவுகள், நொறுக்குத் தீனிகள் என்பதாகும்.
குழந்தைகள் இதனை அதிகம் விரும்புவதற்கு காரணங்கள் அதன் சுவை, அதற்கான விளம்பரங்கள், எளிதில் கிடைக்கும் தன்மை தான். இதனால் ஒவ்வாமை, உடல் பருமன், சிறுவயதில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற உடல் பாதிப்புகள் ஏற்படும். குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை பற்றிய விழிப்புணர்வை பெற்றோர்கள் ஏற்படுத்த வேண்டும். பெற்றோர்கள் முன்மாதிரியாக ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். 'ஜங்க் புட்'-ன் தீமைகளை எடுத்துக் கூறி ஆரோக்கியமான காய்கறிகள், கீரைகள், பழங்கள் இவற்றை சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு பழக்கப்படுத்த வேண்டும். குடும்பமாக அமர்ந்து ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொண்டால் குழந்தைகளும் அவற்றை பின்பற்றுவார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.