குழந்தைகள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தாகும் உணவுப் பண்டங்கள்

நாகரிகம் என்ற பெயரால் மாறிவரும் இந்த உணவுப் பழக்கங்களால் ஏற்படுகின்ற சாதக பாதங்கள் குறித்து தேனி மாவட்டத்தை சேர்ந்த குழந்தைகள் நல டாக்டர் மற்றும் தாய்மார்கள் கூறிய கருத்துகள் விவரம் வருமாறு:-

Update: 2023-01-16 19:00 GMT

நமது வீட்டில் சமைக்கின்ற உணவுகளை மட்டுமே சாப்பிட்டுவந்த காலம் உண்டு. சாதம், இட்லி, தோசை மட்டுமே பிரதான உணவுகளாக இருந்தன.

சோளம், உளுந்து, பயிறு, கடலை, அரிசி ஏதோ ஒன்றை வறுத்துத் தருவார்கள். மிஞ்சிப் போனால் முறுக்கு, சீடை, கடலை மிட்டாய் போன்ற நொறுக்குத் தீனிகளை கடைகளில் வாங்கிச் சாப்பிடுவோம். அவை கலப்படம் இல்லாமலும், மண் சார்ந்த உணவுகளாகவும், சுவை குறைவாக இருந்தாலும் ஆரோக்கியம் குறைவில்லாமல் இருந்தன.

ஓட்டல்களுக்கு எப்போதோ ஒருநாள் தவிர்க்க முடியாமல் போவது உண்டு.

இப்போது நிலைமை அப்படி அல்ல. ஓட்டல்களுக்கு போவது ஒரு நாகரிகமான, கவுரவமான நடைமுறையாகி விட்டது.

மாறிவரும் உணவுப் பழக்கம்

பெரும்பாலான வீடுகளில் சமையல் அறைகள் ஓட்டல்களுக்கு போய்விட்டன. வீடுகள் தங்கும் ஓட்டல்களாக மாறிவருகின்றன. இதனால் பல்வேறு ஒவ்வாமைகள், பிரச்சினைகள் உடல்ரீதியாக நாம் சந்திக்க நேர்கின்றன.

குழந்தைகளும் இயற்கையான உணவை விட்டு செயற்கையாக செய்யப்படும் கவர்ச்சியான உணவு வகைகளையே விரும்புகிறார்கள். பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள், சாக்லெட், லேஸ் போன்ற தின்பண்டங்கள், எண்ணெயில் பொரித்த உணவுகள், பிசா, பர்கர் போன்ற ரெடிமேடு உணவு வகைகளுக்கும் அடிமையாகி வருகிறார்கள்.

நாகரிகம் என்ற பெயரால் மாறிவரும் இந்த உணவுப் பழக்கங்களால் ஏற்படுகின்ற சாதக பாதங்கள் குறித்து குழந்தை மருத்துவர் மற்றும் தாய்மார்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்து இருக்கிறார்கள்.

தேனி மாவட்டத்தை சேர்ந்த குழந்தைகள் நல டாக்டர் மற்றும் தாய்மார்கள் கூறிய கருத்துகள் விவரம் வருமாறு:-

குழந்தைகளுக்கு பாதிப்பு

சுகன்யா (குடும்பத்தலைவி, அல்லிநகரம்) :- எனக்கு 2 பெண் குழந்தைகள். குழந்தைகள் அடிக்கடி ஆசைப்பட்டு கேட்கிறார்கள் என்று கடைகளில் பல வண்ண கவர்களில் அடைத்து விற்பனை செய்யும் தின்பண்டங்கள் வாங்கிக் கொடுத்தேன். வீட்டில் செய்யும் பலகாரங்களை விடவும், கடைகளில் விதவிதமாக விற்பனை செய்யும் தின்பண்டங்களை தான் குழந்தைகள் அதிகம் விரும்புகிறார்கள். குழந்தைகளுக்கு அடுத்தடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்டது. டாக்டரிடம் அழைத்துச் சென்றபோது கடைகளில் வாங்கிச் சாப்பிட்ட தின்பண்டங்களால் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிவித்தார். குழந்தைகளின் உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்கள் விற்பனை அதிக அளவில் நடக்கிறது. அவற்றை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டறிந்து பறிமுதல் செய்ய வேண்டும். இதுபோன்ற தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்களின் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும்.

பவ்யா நாகராஜ் (குடும்பத்தலைவி, உப்புக்கோட்டை) :- துரித உணவுகள் குழந்தைகளின் உடல்நலனை எளிதில் பாதிக்கிறது. விதவிதமாக விற்பனை செய்யப்படும் பல தின்பண்டங்கள் குழந்தைகளை ஈர்க்கும் வகையில் இருக்கிறது. அழுது அடம் பிடிப்பதால் பெற்றோர்களும் வேறு வழியின்றி வாங்கிக் கொடுக்கின்றனர். கடைகளில் வாங்கிக் கொடுக்கும் தின்பண்டங்களை சாப்பிட்டு பழகும் குழந்தைகள் வீட்டில் சமைத்த உணவுகளை வெறுக்கத் தொடங்குகின்றனர். எந்த கடைக்கு சென்றாலும் அங்கே குழந்தைகளை கவரும் வகையிலும், எளிதில் விற்பனை செய்யும் வகையிலும் பணம் செலுத்தும் கல்லாவுக்கு அருகில் தின்பண்டங்கள் வைக்கப்பட்டு இருக்கின்றன. இதனால், குழந்தைகளின் அடம் அதிகரிக்கிறது. இதுபோன்ற பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்களில் அதிகமான உப்பும், சர்க்கரையும் கலந்து இருக்கும். குழந்தைகளை இதுபோன்ற தின்பண்டங்களில் இருந்து மீட்பது சவாலாக உள்ளது.

புற்றுநோய் அபாயம்

கனிமொழி (கல்லூரி துணை முதல்வர், ஆனைமலையன்பட்டி) :- தவறான உணவு பழக்க வழக்கங்களால் இன்றைக்கு தமிழ்நாட்டில் சுமார் 60 சதவீதம் பேர் சர்க்கரை நோய் மற்றும் பிற நோய்களால் பாதிப்படைந்துள்ளனர். குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வழங்க வேண்டும் என்ற எண்ணம் தற்போது இருக்கின்ற தாய்மார்களுக்கு வரவில்லை. குழந்தை அழாமல் இருந்தால் போதும் என்று எண்ணத்தோடு துரித உணவுகளை வாங்கிக் கொடுத்து குழந்தையின் வளர்ச்சியையும் வேகத்தையும் கட்டுப்படுத்துகின்றனர். தவறான உணவு பழக்க வழக்கத்தை குழந்தைக்கு அறிமுகப்படுத்தி வருகின்றனர். இதனால் எதிர்கால இளைஞர் சமுதாயமும் நோயற்ற வாழ்வு வாழ முடியாத அளவுக்கு உணவு பழக்க வழக்கங்கள் மாறி உள்ளது. குழந்தைகளுக்கு எவ்வாறு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் வழங்க வேண்டும் என்பதனை தமிழக அரசு தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

ஈஸ்வரன் (குழந்தைகள் நல டாக்டர், தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி) :- ஜங்க் புட் எனப்படும் உணவுப் பொருட்களில் சுவையை கூட்டிக் கொடுப்பதற்காக வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. அந்த வேதிப்பொருள் உடல் நலத்துக்கு தீங்கானது. குழந்தைகளின் உடல் நலத்துக்கு எதிரானது. கனைய புற்றுநோய், உடல் செரிமானம் போன்ற பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இன்றைய குழந்தைகள் சாப்பிட்டு பார்த்து சுவையை உணர்வதை விடவும், விழிகளால் பார்த்தே சுவையாக இருக்கும் என்று நம்புகிறார்கள். பார்க்க அழகாக இருந்தால் சுவையாக இருக்கும் என்று குழந்தைகள் நம்புகிறார்கள். இதனால், தான் பாக்கெட் செய்யப்பட்டு, கவரும் வகையில் பல வண்ணங்களில் இருக்கும் தின்பண்டங்களை கேட்டு அடம் பிடிக்கிறார்கள். எனவே, வீடுகளில் தயாரிக்கும் தின்பண்டங்களை அழகுபடுத்தி கொடுக்க வேண்டும். சிறுதானியங்களில் பல வகையான தின்பண்டங்கள் செய்யலாம். அவற்றை குழந்தைகளுக்கும் பிடிக்கும் வகையில் அழகுபடுத்தி கொடுத்து சாப்பிட வைக்க வேண்டும். முடிந்த அளவுக்கு கடைகளில் தின்பண்டங்கள் வாங்கிக் கொடுப்பதையும், தரமற்ற உணவுப் பொருட்களை வாங்கிக் கொடுப்பதையும் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும்.

ஊட்டச்சத்து அவசியம்

லோகேஸ்வர் (குழந்தைகள் நல டாக்டர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர், கம்பம் அரசு ஆஸ்பத்திரி):- குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஊட்டச்சத்து மிகவும் அவசியம். ஆனால், இன்றைக்கு குழந்தைகளிடம் ஊட்டச்சத்து குறைபாடு அதிகம் காணப்படுகிறது. பணக்கார வீட்டு பிள்ளைகளிடம் கூட ஊட்டச்சத்து குறைபாடு இருக்கிறது. அதற்கு காரணம் துரித உணவுகள் மற்றும் கவர்ச்சிகரமாக விற்பனை செய்யப்படும் தரமற்ற தின்பண்டங்கள் தான். குழந்தைகளுக்கு ஏதாவது ஒவ்வாமை இருந்தால் வயிற்றுப்போக்கு ஏற்படுவது இயல்பு. ஆனால், தற்போது வயிற்று வலியால் அவதிப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கு இதுபோன்ற தரமற்ற தின்பண்டங்களே காரணமாக அமைந்து விடுகிறது. கல்வி நிறுவனங்கள் மற்றும் அவற்றின் அருகாமையில் துரித உணவுகள், தரமற்ற உணவுகள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். துரித உணவுகளின் கெடுதல் குறித்தும், பாரம்பரிய உணவுகளின் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளை கவரும் வகையில் தின்பண்டங்களுடன் இலவசமாக பொம்மை, கார்ட்டூன் படங்கள், விளையாட்டு சாதனங்கள் அளிப்பதை தடை செய்ய வேண்டும். பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் ஆசைப்பட்டு கேட்கிறார்கள் என்பதால் கண்டதையும் வாங்கிக் கொடுப்பதை கைவிட்டு, குழந்தைகளின் ஆரோக்கியத்தில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்