குடிநீர் ஆலைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை
திருப்பத்தூர் மாவட்டத்தில் குடிநீர் ஆலைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 12 தனியார் குடிநீர் ஆலைகள் செயல்பட்டு வருகிறது. கோடை காலம் தொடங்கி உள்ளதால் குடிநீரின் தேவைகள் அதிகரித்து வருகிறது. இதனால் குடிநீர் ஆலைகளில் இருந்து விற்பனைக்கு வரும் குடிநீர் தரமானதாக உள்ளதா என வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட நியமன அலுவலர் செந்தில்குமார், திருப்பத்தூர் உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிச்சாமி ஆகியோர் குடிநீர் ஆலைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது குடிநீர் தொழிற்சாலையில் தண்ணீர் முறையாக சுத்திகரிக்கப்படுகிறதா எனவும், பிளாஸ்டிக் பாட்டில்களில் முறையாக தண்ணீர் அடைக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். மேலும் 20 லிட்டர் கேன்களை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். பழுதடைத்த, நாள்பட்ட கேன்களை பயன்படுத்த கூடாது என்றும், கேன்களின் மீது லேபிள், பயன்படுத்தும் காலம் போன்றவை ஒட்ட வேண்டும் என்றும், ஆலையில் வேலையில் உள்ள பணியாளர்கள் தலையில் கேப்பும், கையுறையும் கட்டாயம் அணித்திருக்க வேண்டும். அவர்கள் பயிற்சி பெற்றவர்களாக இருக்கவேண்டும் என அறிவுறுத்தினர்.
இந்த ஆய்வின்போது குடிநீர் ஆலைகளில் 5 மாதிரிகள் எடுத்து சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.