அரசு பள்ளியில் உணவு திருவிழா
தொப்பம்பட்டி அரசு பள்ளியில் உணவு திருவிழா நடந்தது.;
பொள்ளாச்சி அருகே உள்ள தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம் தொப்பம்பட்டி நடுநிலைப்பள்ளியில் உணவுத்திருவிழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமையாசிரியர் கணேசன் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார்.
1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் உடலுக்கு நன்மை தரும் உணவுகள், தீமை தரும் உணவுகள் என்னும் தலைப்பில் பல்வேறு வகையான உணவுப் பொருள்களை எடுத்து வந்திருந்தனர். சோளம், கம்பு, ராகி, வரகு, திணை, சாமை போன்ற சிறுதானிய உணவுகள், கீரைகள், பழங்கள், காய்கறிகள் போன்ற உடலுக்கு நன்மை தரும் உணவுப்பொருள்களும், நூடுல்ஸ், மைதா பொருள்கள் மற்றும் துரித உணவுகள் போன்ற உடலுக்கு தீமை தரும் உணவுப்பொருள்களும் கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்தன. மேலும் உணவுப்பொருட்களை வீணாக்காமல், அதை மீண்டும் உண்ணும், உணவாக எப்படி மாற்றலாம் என்று மாணவ-மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. கண்காட்சியை மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் பார்வையிட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் மகாலட்சுமி, தேவி, உஷா, மனுவேல்ராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.