சாலையோர கடைக்காரர்களின் வீடுகளில் உணவுத்துறை அதிகாரி திடீர் ஆய்வு - வடமாநிலத்தினர் 2 பேருக்கு அபராதம்
கும்மிடிப்பூண்டியில் சாலையோர கடையில் மண்ணில் தவறி விழுந்த பானிபூரிகளை கடைக்காரர் சேகரித்து விற்பனை செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, பானி பூரியை தயாரிக்கும் வடமாநிலத்தினர் வீடுகளில் உணவுத்துறை அதிகாரி திடீர் சோதனை செய்து அபராதம் விதித்தார்.;
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஜாரில், மண்ணில் விழுந்த பானி பூரிகளை கடைக்காரர் சேகரித்து விற்பனை செய்திடும் காட்சி சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வைரலானது. இதனையடுத்து கும்மிடிப்பூண்டி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் இளங்கோ மேற்கண்ட சாலையோர பானி பூரி விற்பனையில் ஈடுபட்டு வரும் வடமாநிலத்தினர் வீடுகளில் நேற்று திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது, உணவு பொருட்களை சுகாதரமற்ற முறையில் தயாரிப்பதும், உடலுக்கு கேன்சர் போன்ற தீங்கு விளைவிக்கும் ரசாயன பவுடர்களை உணவில் கலந்து தயாரிப்பதும் தெரியவந்தது. சாயப்பவுடர்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், உணவு பொருட்களை பினாயில் ஊற்றி அழித்தனர். மேலும் இவ்வாறு சுகாதரமற்ற முறையில் உணவு பொருள் தயாரிப்பில் ஈடுபட்டதாக 2 வடமாநிலத்தினருக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.