ஆய்வக வாகனம் மூலம் உணவுப்பொருட்கள் தர பரிசோதனை

ஆய்வக வாகனம் மூலம் உணவுப்பொருட்கள் தர பரிசோதனை

Update: 2023-07-14 11:53 GMT

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் முழுவதும் உணவுப்பொருட்களின் தரம் அறிய நடமாடும் ஆய்வக வாகனம் மூலம் இலவசமாக பரிசோதனை செய்ய உணவு பாதுகாப்புத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உணவுப்பொருட்கள் கலப்படம்

உணவுப்பொருட்களின் தரம் கலப்படம் குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி உணவு மாதிரிகளை சேகரித்து ஆய்வுகளுக்கு அனுப்பி அதன் முடிவுகள் அடிப்படையில் கலப்பட தயாரிப்பு நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் உணவுப்பொருட்களின் தரத்தை ஆய்வு செய்து உடனுக்குடன் முடிவுகள் அறிந்து கொள்ள உணவுப்பாதுகாப்புத்துறை சார்பில் நடமாடும் ஆய்வகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

திருப்பூர் மாவட்டத்தில் இந்த நடமாடும் ஆய்வகம் மூலம் உணவுப்பொருட்களின் கலப்படம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு பகுதியாக ஆய்வு நடத்தப்படுகிறது. இந்த நடமாடும் ஆய்வக வாகனங்கள் பொது இடங்களில் மட்டுமில்லாமல் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே, அவர்கள் உட்கொள்ளும் துரித உணவுப்பொருட்களின் தன்மை பற்றியும், தீங்குகள் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.

மசாலா பொருட்களின் தரம்

வீடுகளில் இல்லத்தரசிகள் வழக்கமாக பயன்படுத்தும் உணவுப்பொருட்கள், உப்பு, பருப்பு வகைகள், மசாலா பொருட்கள் தரமானதா என்பதையும், நிறமிகள் மற்றும் தேவையற்ற வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதையும் இந்த நடமாடும் ஆய்வகத்தின் மூலம் உடனடியாக அறிந்து கொள்ளலாம்.

நுகர்வோர் சமையலுக்கு பயன்படுத்தும் உணவுப்பொருட்களில் சேர்க்கப்பட்டுள்ள வேதிப்பொருட்கள் பற்றிய தன்மையை தாமாகவே கண்டறிய விழிப்புணர்வு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இந்த நடமாடும் ஆய்வக வாகனம் மூலம் வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் பொருட்களின் தரத்தை பரிசோதனை செய்து பயன் பெறலாம். முற்றிலும் இலவசமாக இந்த சேவையை மக்கள் பயன்படுத்தி உணவுப்பொருட்களின் தரத்தை உறுதி செய்து கொள்ளலாம்.

ஆய்வக வாகனம் செல்லும் இடங்கள்

நடமாடும் ஆய்வக வாகனம் திருப்பூர் தெற்கு, பல்லடம், குண்டடம், பொங்கலூர் வட்டாரத்துக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தியது. வருகிற 17-ந் தேதி குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரத்திலும், 18,19-ந் தேதிகளில் உடுமலை, 20,21-ந் தேதிகளில் தாராபுரம், மூலனூர் வட்டாரத்திலும், 24-ந்தேதி வெள்ளகோவில், 25-ந்தேதி காங்கயம், 26-ந் தேதி திருப்பூர், ஊத்துக்குளி ஒன்றியம், 27-ந்தேதி அவினாசி ஒன்றியம், 28-ந்தேதி திருப்பூர் வடக்கு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

உணவகங்களில் சுகாதாரமற்ற முறையில் உணவு வினியோகம் செய்தல், சாப்பிட்ட பின் ஏற்படும் உபாதைகள் போன்ற புகார்களை 94440 42322 என்ற வாட்ஸ்-அப் எண்ணிற்கு புகைப்படத்துடன் புகார் தெரிவிக்கலாம். புகார் அளிப்பவரின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும்.

இந்த தகவலை திருப்பூர் மாவட்ட உணவுப்பாதுப்புத்துறை நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தெரிவித்துள்ளார்.

----

Tags:    

மேலும் செய்திகள்