விண்ணை தொடும் பூக்கள் விலை; இல்லத்தரசிகள், வியாபாரிகள் கருத்து

விண்ணை தொடும் பூக்களின் விலை உயர்வு குறித்து இல்லத்தரசிகளும், பூ வியாபாரிகளும் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

Update: 2022-12-30 16:56 GMT

விழாக்காலங்களில் பூக்களின் விலை கடுமையாக உயர்வது வழக்கம். தற்போது மார்கழி மாதம் என்பதாலும், புத்தாண்டு, சபரிமலை சீசன் போன்ற விசேஷ நாட்கள் இருப்பதாலும் பூக்களின் தேவை அதிகமாக உள்ளது. ஆனால் வடகிழக்கு பருவமழை மற்றும் பனி காரணமாக பூக்கள் வரத்து குறைந்து, பல்வேறு இடங்களில் பூக்களின் விைல கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

குறிப்பாக திண்டுக்கல், தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் விளைச்சல் குறைந்துள்ளன. பொங்கல் பண்டிகை வரை இந்த விலை உயர்வு நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் பூ மார்க்கெட்

பூக்கள் சாகுபடியில் 'தமிழகத்தின் ஹாலந்து' என திண்டுக்கல் அழைக்கப்படுகிறது. மாவட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் பூக்கள் திண்டுக்கல், நிலக்கோட்டையில் செயல்படும் பூ மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. இதில் திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே செயல்படும் பூ மார்க்கெட்டில் 127 கடைகள் உள்ளன. திண்டுக்கல்லை அடுத்த செந்துறை, ஏ.வெள்ளோடு, கல்லுப்பட்டி, தாடிக்கொம்பு, கொடைரோடு, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த பூக்களை இங்கு கொண்டு வந்து ஏலம் விட்டு வியாபாரிகளுக்கு விற்பனை செய்கின்றனர். அவற்றை வியாபாரிகள் வாங்கி பொதுமக்களுக்கு மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்கின்றனர். ரோஜா, மல்லிகை, முல்லை, சம்பங்கி, ஜாதிப்பூ உள்ளிட்ட 50 வகை பூக்கள் திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் விற்கப்படுகின்றன. பூக்களின் வரத்து, தேவையை பொறுத்து அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

தினமும் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரை திண்டுக்கல் பூ மார்க்கெட்டுக்கு வந்து பூக்களை வாங்கிச்செல்கின்றனர். இதனால் திண்டுக்கல் பூ மார்க்கெட் காலை நேரத்தில் மிகவும் பரபரப்பாக காணப்படும். திண்டுக்கல்லில் இருந்து திருச்சி, மதுரை, மயிலாடுதுறை, கும்பகோணம் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் இங்கிருந்து பூக்கள் அதிக அளவில் அனுப்பி வைக்கப்படுகிறது. சீசன் காலத்தில் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இருந்து அதிக அளவில் பூக்கள் கொண்டு செல்லப்படுகிறது.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி

அதேபோல் துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் திண்டுக்கல், நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் இருந்து பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது பூக்கள் சாகுபடி வெகுவாக குறைந்தது. இதனால் திண்டுக்கல் மார்க்கெட்டுக்கும் பூக்களின் வரத்து குறைந்து போனது. வரத்து குறைவு மற்றும் புத்தாண்டு, பொங்கல் பண்டிகை காரணமாக திண்டுக்கல்லில் பூக்கள் விலை விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

வழக்கமாக சீசன் காலத்தில் பூ மார்க்கெட்டுக்கு தினமும் 40 டன் முதல் 45 டன் வரையும், சாதாரண நாட்களில் 15 டன் முதல் 20 டன் வரையும் பூக்கள் வரத்தாகும். தற்போது சீசன் இருந்தும் வரத்து குறைந்ததால் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆனாலும் வியாபாரிகள் கவலையில் உள்ளனர்.

பூக்களின் விலை உயர்வு குறித்து இல்லத்தரசிகளும், பூ வியாபாரிகளும் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

லாபம் கிடைப்பதில்லை

ராமகிருஷ்ணன் (வியாபாரி, பெருமாள்கோவில்பட்டி):- ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு, பொங்கல் பண்டிகையையொட்டி பூக்கள் விலை உயரும் எங்களுக்கும் கூடுதல் வருமானம் கிடைக்கும். ஆனால் தற்போது மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து குறைவாக உள்ளது. 20 டன் முதல் 25 டன் வரையே வரத்தாகி உள்ளது. இதன் காரணமாக பூக்களின் விலை உயர்ந்த போதும் எங்களுக்கு கட்டுப்படியாகவில்லை. மேலும் பூக்களின் விலை உயர்ந்ததால் பொதுமக்களும் குறைந்த அளவில் தான் பூக்களை வாங்கிச்செல்கின்றனர்.

செல்லம்மாள் (வியாபாரி, தருமத்துப்பட்டி):- பூக்கடைகளில் விலை அதிகமாக இருக்கும் என்பதால் தான் பெண்கள் மார்க்கெட்டுக்கு வந்து பூக்களை வாங்குகின்றனர். இந்தநிலையில் பெண்கள் அதிகம் விரும்பி வாங்கும் மல்லிகை பூவின் விலை கிலோவுக்கு ரூ.2 ஆயிரம் என தெரிந்ததும் வாங்காமல் சென்றுவிடுகின்றனர். அல்லது வழக்கமாக வாங்கும் அளவைவிட குறைத்து வாங்குகின்றனர். இதனால் எங்களுக்கு லாபம் கிடைப்பதில்லை. தினமும் ரூ.300 வருமானம் கிடைப்பதே அரிதாக இருக்கிறது.

அதிக விலை கொடுத்து...

திண்டுக்கல் பூ மார்க்கெட்டுக்கு பூக்களை வாங்க வந்த உமாராணி கூறுகையில்:- பூக்கடைகளில் விற்கப்படும் மலர் மாலைகளை வாங்காமல் மார்க்கெட்டில் குறைந்த விலையில் கிடைக்கும் பூக்களை வாங்கி வந்து மாலையாக தொடுத்து கோவில்களுக்கு பூஜைக்காக கொண்டு செல்வோம். அதற்காகவே இன்று (நேற்று) மார்க்கெட்டுக்கு வந்தேன். ஆனால் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. முல்லை, மல்லிகை பூக்களின் விலை ஆயிரத்தை கடந்துவிட்டது. கடந்த 3-ந்தேதி அய்யப்ப பக்தர்கள் சீசன், திருமண முகூர்த்த நாள் ஆகியவற்றால் ஒரு கிலோ மல்லிகை பூவின் விலை ரூ.5 அயிரமாக இருந்தது. அதன் பிறகு விலை குறைந்ததால் சற்று நிம்மதியடைந்தேன். ஆனால் தற்போது மீண்டும் மல்லிகை பூவின் விலை ரூ.2 ஆயிரத்தை தொட்டுள்ளது. ஆனாலும் வேறு வழியின்றி அதிக விலை கொடுத்து பூக்களை வாங்க வேண்டிய நிலை உள்ளது என்றார்.

பிரியங்கா (குடும்ப தலைவி, குமரன்திருநகர்):- பெண்கள் அதிகம் விரும்பி சூடிக்கொள்ளும் முல்லை, மல்லிகை பூக்களின் விலை கடந்த மாதம் முறையே ரூ.300, ரூ.400 வரையே இருந்தது. ஆனால் தற்போது முல்லைப்பூ ரூ.1,300-க்கும், மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரத்துக்கும் மார்க்கெட்டில் விற்பனை ஆகிறது. இதனால் அந்த பூக்களை வாங்கி சூடிக்கொள்ள ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பெண்கள் தற்போது விருப்பம் காட்டாமல் உள்ளனர். புத்தாண்டு, பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு பூக்கள் விலை குறையும். அப்போது வாங்கிக்கொள்ளலாம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்