ஸ்ரீரங்கம் கோவிலை காக்க உயிர் தியாகம் செய்தவர்களுக்கு மலர்தூவி மரியாதை

ஸ்ரீரங்கம் கோவிலை காக்க உயிர் தியாகம் செய்தவர்களுக்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது.

Update: 2023-04-04 19:18 GMT

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் மீது சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் வேற்று மதத்தினர் படையெடுப்பின் போது கோவிலை பாதுகாக்க முயற்சித்த 12 ஆயிரம் பெருமாளின் பக்தர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் உயிர் தியாகத்தை போற்றும் வகையிலும், கோவிலில் முகாமிட்டிருந்த வேற்று மத படையினரை இங்கிருந்து அப்புறப்படுத்துவதற்காக கோவிலில் நடனம் மற்றும் கைங்கரியம் செய்து வந்த வெள்ளையம்மாள் என்ற பெண் ஸ்ரீரங்கம் கோவிலின் கிழக்கு வாசலில் உள்ள கோபுரத்திற்கு மேல் படை தளபதியை அழைத்துச் சென்று அங்கிருந்து அவரை தள்ளிவிட்டு பின்னர் தன் உயிரையும் தியாகம் செய்தார். அவரது இந்த தியாகத்தை நினைவூட்டும் வகையில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தென்பாரத திருக்கோவில் திருமடங்கள் அமைப்பு சார்பில் நேற்று ஸ்ரீரங்கம் கோவில் வெள்ளை கோபுரம் முன் மோட்சதீபம் ஏற்றி வழிபட முற்பட்டனர். அதற்கு கோவில் நிர்வாகம் மற்றும் போலீசார் அனுமதி மறுத்ததை அடுத்து கோவில் திருமடங்கள் மாவட்ட அமைப்பாளர் அனந்த பத்மநாதன் தலைமையில் பக்தர்கள் பாசுரங்கள் பாடினர்.

அதன்பின் கோவில் திருமடங்கள் அமைப்பாளர் சரவண கார்த்திக் 12 ஆயிரம் பெருமாள் பக்தர்கள் மற்றும் வெள்ளையம்மாள் உயிர் தியாகம் குறித்து பேசினார். இதையடுத்து கோவில் திருமடங்கள் அமைப்பு திருச்சி மாவட்ட துணைத்தலைவர்கள் சங்கர் ஜி, அழகு யுவராஜ், மாவட்ட செயலாளர் சீனிவாசன் உள்பட அனைவரும் வெள்ளை கோபுரத்துக்கு மலர் தூவி, தரையில் விழுந்து வணங்கினர். பின்னர் கோவிலுக்குள் சென்று பெருமாளை தரிசித்துச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்