கரூர் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா

கரூர் மாரியம்மன் கோவிலில் நேற்று பூச்சொரிதல் விழா நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.;

Update: 2023-05-19 19:04 GMT

பூச்சொரிதல் விழா

கரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டு வைகாசி திருவிழா கடந்த 14-ந்தேதி தொடங்கி ஜூன் மாதம் 11-ந்தேதி வரை நடக்கிறது. இந்த திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் கோவில் முன்பு கம்பம் நடப்பட்டு புனிதநீர் ஊற்றி வழிபாடு செய்வதும், பிறகு அந்த கம்பத்தினை ஆற்றில் விடும் நிகழ்வும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.

அந்தவகையில் இந்த ஆண்டு கடந்த 14-ந்தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. அதன் பிறகு தினமும் பக்தர்கள் புனிதநீர், பால் மூலம் கம்பத்திற்கு அபிஷேகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூச்சொரிதல் விழா நேற்று நடந்தது. இதனையொட்டி நேற்று காலை கோவில் மண்டபத்தில் மகாசண்டிஹோமம் நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பக்தர்கள் ஊர்வலம்

பூச்சொரிதல் விழாவையொட்டி கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் அம்மனுக்கு பூத்தட்டு கொண்டு வந்து வழிபடுவது வழக்கம். அந்தவகையில் நேற்று இரவு கரூர், வெங்கமேடு, தாந்தோன்றிமலை, பசுபதிபாளையம், காந்திகிராமம் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் இருந்து 47 பூத்தட்டுகள் கொண்டு வந்தனர்.

அவர்கள் தங்களது பகுதியில் இருந்து அம்மனை அலங்கரித்து ரதத்தில் வைத்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தனர். ரதத்தினை பின்தொடர்ந்தபடியே பக்தர்கள் அம்மனை மனமுருக வேண்டியபடி பூத்தட்டுகளுடன் நடந்து வந்தனர். அப்போது ரதத்திற்கு முன்பாக வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டு, இசை வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

அம்மன் ரதங்களுடன் வெவ்வேறு பகுதியிலிருந்து வந்த பூத்தட்டு ஊர்லமானது வரிசையாக கரூர் மாரியம்மன் கோவிலை அடைந்ததும் சிறப்பு பூஜை செய்யப்பட்டன. அப்போது பக்தர்களால் கொண்டு வரப்பட்ட பூக்கள் அம்மனுக்கு படைக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கரூரில் பூச்சொரிதல் விழாவையொட்டி பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டன. முக்கிய வீதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், வருகிற 29-ந்தேதி திருத்தேரோட்டமும் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்