வேப்பனப்பள்ளி பகுதியில் செண்டுமல்லி பூ விலை கடும் சரிவு-கால்நடைகளுக்கு உணவாகும் அவலம்

வேப்பனப்பள்ளியில் செண்டுமல்லி பூ விலை கடுமையாக சரிவடைந்துள்ளது. இதனால் அவை கால்நடைகளுக்கு உணவாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

Update: 2022-09-05 16:20 GMT

வேப்பனப்பள்ளி:

செண்டுமல்லி பூ

வேப்பனப்பள்ளி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். இவ்வாறு சாகுபடி செய்யப்படும் பூக்கள் பிற மாவட்டங்கள், மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த 3 மாதங்களாக விவசாயிகள் செண்டுமல்லி பூ சாகுபடியில் ஆர்வம் காட்டி வந்தனர்.

இதனால் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் செண்டுமல்லி பூ சாகுபடி செய்தனர். இந்தநிலையில் வேப்பனப்பள்ளி பகுதியில் கடந்த 2 வாரங்களாக கனமழை கொட்டி வருகிறது. இதனால் செண்டுமல்லி பூ விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் விலையும் சரிவடைந்துள்ளது.

விலை சரிவு

கடந்த சில நாட்களாக செண்டுமல்லி கிலோ ரூ.2 முதல் ரூ.5-க்கு விற்பனையாகி வருகிறது. இதனால் பூக்களை பறிக்கும் கூலி கூட வழங்க முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே செடிகளில் இருந்து பூக்களை பறிக்காமல் தோட்டத்தில் அப்படியே விட்டுள்ளனர். இதனால் அவை ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு உணவாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மழை காரணமாக செண்டுமல்லி பூ போதிய வளர்ச்சியின்றி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அதன் விலை கடுமையாக சரிவடைந்து, விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே நஷ்டத்தை சமாளிக்க அரசு நிதியுதவி அளிக்கவேண்டும் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்