சிவராத்திரியையொட்டி பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
கரூர் மார்க்கெட்டில் சிவராத்திரியையொட்டி பூக்கள் விலை கிடுகிடுெவன உயர்ந்துள்ளது. மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனையானது.;
பூ மார்க்கெட்
கரூர் ரெயில் நிலையம் அருகே பூ மார்க்கெட் உள்ளது. இங்கு கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான லாலாபேட்டை, தோகைமலை, தரகம்பட்டி போன்ற பகுதிகளில் இருந்து தினமும் லாரி, டெம்போ மூலம் பூக்கள் வருகின்றன.
தினமும் அதிகாலையிலேயே பூக்கள் விற்பனைக்காக வருவதால், அவற்றை வாங்கி செல்ல பல்வேறு ஊர்களில் இருந்து தினமும் ஏராளமான வியாபாரிகள் வந்து பூக்களை வாங்கிச் செல்கின்றனர். இந்தநிலையில் இன்று (சனிக்கிழமை) சிவராத்திரியையொட்டி நேற்று பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
விலை அதிகரிப்பு
பூ மார்க்கெட்டில் நேற்று விற்ற பூக்களின் விவரம் கிலோவில் பின்வருமாறு:-
ஒரு கிலோ ரூ.700-க்கு விற்ற பிச்சிபூ ரூ.200 உயர்ந்து நேற்று ரூ.900-த்திற்கும், ரூ.1400-க்கு விற்ற மல்லிகை பூ ரூ.600 உயர்ந்து ரூ.2 ஆயிரத்திற்கும், ரூ.150-க்கு விற்ற அரளிப்பூ ரூ.150 உயர்ந்து ரூ.300-க்கும், ரூ.120-க்கு விற்ற செவ்வந்தி பூ ரூ.80 உயர்ந்து ரூ.200-க்கும், ரூ.200-க்கு விற்ற செவ்வரளி பூ ரூ.150 உயர்ந்து ரூ.350-க்கும், ரூ.100-க்கு விற்ற பன்னீர் ரோஸ் ரூ.100 உயர்ந்து ரூ.200-க்கும், ரூ.500-க்கு விற்ற கனகாம்பரம் ரூ.500 உயர்ந்து ரூ.1,000-க்கும் விற்பனையானது.
ரூ.40-க்கு விற்ற ஒரு கொழுந்து கட்டு ரூ.10 உயர்ந்து ரூ.50-க்கு விற்பனையானது. சிவராத்திரி என்பதால் பூக்கள் தேவை அதிகமாக இருந்தது. இதனால், வியாபாரிகள் போட்டி போட்டு பூக்களை வாங்கிச் சென்றதை காணமுடிந்தது.