மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு

மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு

Update: 2023-08-24 20:10 GMT

ஓணம் பண்டிகை மற்றும் வரலட்சுமி பூஜையையொட்டி மதுரை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மல்லிகைப்பூ காலையில் கிலோ 900 ரூபாய்க்கும், மதியம் ரூ. 1200 வரை விற்பனையானது. கேரள மாநிலத்தின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக கொண்டாடப்படுவது ஓணம் பண்டிகை, இந்த பண்டிகையையொட்டி மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிக அளவில் வசிக்கும் கேரள மக்கள் இந்த பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சியான பூக்களால் அத்தபூ கோலமிட்டு கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது, இதனால் இந்த பண்டிகைக்கு அதிகளவில் பூக்களின் தேவை இருக்கும். அதுபோல இன்று வரலட்சுமி விரதம் இளம் பெண்கள் கடைபிடிக்கப்பட்டு கொண்டாடுவார்கள். அதற்கும் அதிக அளவில் பூக்களின் தேவை இருக்கும் என்பதால், மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள ஒருங்கிணைந்த பூ மார்க்கெட்டில் பூக்களை வாங்க பொதுமக்கள் அதிக அளவில் குவிந்து தங்களுக்கு தேவையான பூக்களை வாங்கி செல்கின்றனர். தற்போது பூக்களின் வரத்தும் அதிகரித்துள்ளதால் பூக்களின் விலை கடந்த சில நாட்களாக ஓரளவுக்கு இயல்பான விலைக்கு விற்கப்பட்டன.

இந்த நிலையில் வருகிற 29-ந் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதை யொட்டியும், வரலட்சுமி பூஜை தினத்தையொட்டியும் மதுரை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை நேற்று கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி நேற்று காலை மல்லிகை பூ கிலோ 900 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.முல்லை 700 ரூபாய்க்கும், பிச்சி 600 ரூபாய்க்கும், கனகாம்பரம் 500 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டன. அரளி, பட்டன் ரோஸ், சிவந்தி ஆகிய மலர்கள் 300 ரூபாய்க்கும், வாடாமல்லி 150 ரூபாய்க்கும், சம்பங்கி 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன. மேலும் பூஜைக்கு தேவையான மற்ற வண்ண பூக்களின் விலையும் இரு மடங்காக அதிகரித்துள்ளது.

இந்த விலை உயர்வு இன்னும் சில நாட்கள் தொடரும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பூக்களின் விலை திடீரென அதிகரித்துள்ளதால் பூக்களை வாங்க சென்ற பொதுமக்கள் சற்று குறைந்த எடை அளவிலேயே பூக்களை வாங்கிச் சென்றனர். மேலும் வரலட்சுமி பூஜைக்கு தேவைப்படும் வாழைமரம், தேங்காய், வாழைப்பழம் உள்ளிட்ட பூஜை பொருட்களும் விற்பனையும் அதிக அளவில் நடந்தது. இதனால் அந்த பகுதியே நேற்று காலை முதல் மாலை வரை பரபரப்பாக, போக்குவரத்து நெருக்கடியுடன் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்